முன்னாள் காப்புறுதி முகவரான 44 வயது ஆண்ட்ரூ டியூ சியூ இங், ஆடவர் ஒருவரிடம் போலியான முதலீட்டு வாய்ப்பைச் சொல்லி மொத்தம் 543,000 வெள்ளியை மோசடி செய்ததை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையே ஏறத்தாழ 35 சம்பவங்களில் அந்த ஆடவரிடமிருந்து அவர் பணத்தைப் பெற்றார்.
திங்கட்கிழமை (நவம்பர் 25) நிலவரப்படி, பாதிக்கப்பட்ட ஆடவரிடம் $16,000ஐ டியூ திருப்பித் தந்துள்ளார்.
இதன் தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மற்றொரு கைகலப்புச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு, மலேசியாவில் உள்ள தனது சொத்தை விற்பதற்குப் பணம் தேவைப்படுவதாக முன்னாள் வாடிக்கையாளரின் 44 வயது மகனிடம் மேலும் $30,400ஐ அவர் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டார்.
உண்மையில் அவருக்கு மலேசியாவில் சொத்து எதுவும் இல்லை. மோசடி மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு அவர் மரினா பே சேண்ட்சில் சூதாடியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் 2020ஆம் ஆண்டு மே மாதம் காவல்துறையிடம் புகாரளித்தார்.
மேலும், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி டியூ, ரிவர் வேலி ரோட்டில் வாகன நிறுத்துமிடம் தொடர்பில் 50 வயது ஆடவருடன் சண்டையிட்டார். ஆடவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க வழக்கறிஞர் டியூவிற்கு மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கும்படி கோரினார்.
டிசம்பர் 9ஆம் தேதி டியூவிற்கு தண்டனை விதிக்கப்படும்.