நான்கு வயது மாணவரை உதைத்து அச்சிறுமியின் காலில் காயத்தை ஏற்படுத்திய முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியருக்கு நான்கு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாம் தடுக்கி விழ அந்தச் சிறுமி காரணம் என்று கருதியதால் அலமேலு பரமகுரு அந்த முறையற்ற செயலைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வலி தாங்க முடியாமல் காலைப் பிடித்துக்கொண்டு அழுத சிறுமியை அலமேலு ஏசினார்.
அலமேலு, முதலில் தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், விசாரணை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைச் சோதனையிட்டபோது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிங்கப்பூரரான 57 வயது அலமேலு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தமது கட்சிக்காரருக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்று அலமேலுவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அலமேலு அந்த பாலர் பள்ளியில் ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாகப் பணிபுரிந்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ நாளன்று மாலை 5.40 மணியளவில் அச்சிறுமியின் தாயார் அப்பள்ளிக்குச் சென்றபோது, அலுமேலு தன்னை உதைத்ததாக அச்சிறுமி அவரிடம் கூறினார். அதனால் ஏற்பட்ட சிராய்ப்பையும் அவர் கண்டார்.
அப்போது, அலமேலு பள்ளியைவிட்டுச் சென்றுவிட்டதால் அவரது சக ஊழியர்களிடம் அச்சிறுமியின் தாயார் பேசினார். அதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர்கள் சிறுமிக்கு நேர்ந்தது குறித்து பள்ளி முதல்வரிடம் தெரிவிப்பதாக அவரிடம் கூறினர்.