முன்னாள் வழக்கறிஞர் குற்றவாளி எனத் தீர்ப்பு

நிறுவன இயக்குநரை $8 மில்லியன் ஏமாற்றிய வழக்கு

முன்னாள் வழக்கறிஞர் குற்றவாளி எனத் தீர்ப்பு

2 mins read
c340f233-bea8-43cb-8ad7-0141f4139eb1
தென் ஃபெங் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவன இயக்குநர் ஒருவரை $8 மில்லியனுக்கும் மேல் மோசடி செய்த முன்னாள் வழக்கறிஞர் தென் ஃபெங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

43 வயது தென் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட்டது. மோசடி செய்தது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

தென் $450,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 24ஆம் தேதி தென் அவரின் வாதத்தை முன்வைப்பார். அதே நாள் தீர்ப்பு விதிக்கப்படும்.

புரோவிடன்ஸ் சொத்து நிர்வாக நிறுவனம், ஃபைவ் அண்ட் டூ நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் ஆண்ட்ரூவ் லிங் ஹுயை ஏமாற்றினாரா என்பதில் விசாரணை கவனம் செலுத்தியது. அனைத்துலகச் சட்ட நிறுவனமான வாக்கர்சிடமிருந்து திரு லிங் சேவைகளைப் பெற்றார் என்று தென் அவரை நம்பவைத்தாரா என்பதும் விசாரிக்கப்பட்டது.

வாக்கர்ஸ் நிறுவனத்திற்காக தென் அப்போது பணிபுரிந்தார். கேமன் தீவுகளில் வாக்கர்ஸ் நிபுணத்துவச் சேவைகள் எனும் கிளையைத் தமது நிறுவனம் தொடங்கப்போவதை அவர் அறிந்திருந்தார்.

2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதே பெயரில் பிரிட்டி‌‌ஷ் வெர்ஜின் தீவுகளில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார் தென். அது அவர் வேலை செய்த நிறுவனத்துக்குத் தெரியாது.

பெயர் முதல் சின்னம் வரை விளம்பரம் தொடர்பான அனைத்திலும் வாக்கர்சின் உத்திகளை அப்படியே தென் பயன்படுத்தினார். வாக்கர்சுடன் தொடர்புபடுத்தும் நோக்கமின்றியே நிறுவனத்தை அமைத்ததாக அவர் வலியுறுத்திச் சொன்னார்.

2018ல் மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனைகளுக்கான சேவைகளை வாக்கர்ஸ் வழங்கும் என்று திரு லிங்கிடம் தென் கூறினார். அத்தகைய சேவைகளை வாக்கர்ஸ் நிபுணத்துவச் சேவைகள் நிறுவனத்தின் கீழ் உள்ள வங்கிக் கணக்கின் மூலம் பெறலாம் என்றும் தென் சொல்லியிருந்தார்.

திரு லிங் தமக்குச் சேவைகளை வழங்கப்போவது வாக்கர்ஸ் அனைத்துலகச் சட்ட நிறுவனம்தான் என்று நம்பியிருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. தென்னின் சொந்த நிறுவனம்தான் வழங்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

2018 ஏப்ரலில் தென்னும் திரு லிங்கும் வெளிநாட்டு வங்கியொன்றை வாங்க ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டனர். அதற்குரிய பணத்தை வாக்கர்சின் வங்கிக் கணக்கில் போடுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

திரு லிங் $8 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைப் பல தவணைகளில் வங்கிக் கணக்கில் போட்டார். ஆனால் அவருக்குத் தெரியாமல் அந்தத் தொகை முழுதும் தென்னுக்குச் சொந்தமான நிறுவனத்திற்குச் சென்றது.

ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்றக் கடும் குற்றங்கள் (அனுகூலங்கள் பறிமுதல்) சட்டத்தின்கீழ், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தென்னுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ $500,000 வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்