15 வயது இளையரை மானபங்கம் செய்த குற்றம்: ஒப்புக்கொண்ட முன்னாள் அதிகாரி

15 வயது இளையரை மானபங்கம் செய்த குற்றம்: ஒப்புக்கொண்ட முன்னாள் அதிகாரி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Mar 2026 - 5:13 pm

2 mins read

காவல்துறையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் பதின்ம வயது மாணவர் ஒருவரை மானபங்கம் செய்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இரண்டு மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்ட குற்றத்தையும் 40 வயது ‌‌ஷரிசால் ‌‌ஷஃபீ என்ற முன்னாள் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பெண்ணைப் போல உடை அணிந்து ஒப்பனை செய்துகொண்ட ‌‌ஷரிசால், அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அருகே மாணவர்களை அணுகும்விதத்தில் பள்ளியின் பின்வாசலில் நின்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‌‌ஷரிசால் அணுகிய இரண்டு மாணவர்கள் அங்கிருந்து சென்றதை அடுத்து வேறொரு மாணவரை அவர் அழைத்தார்.

பெண் வேடத்தில் இருந்த ‌‌ஷரிசாலுக்கு உண்மையாக உதவி தேவை என்று எண்ணிய 15 வயது மாணவர், ‌‌ஷரிசாலுடன் புளோக் ஒன்றின் 9ஆம் 10ஆம் தளங்களுக்கு இடையில் உள்ள படிக்கட்டிற்குச் சென்றார்.

அங்கு‌‌ மாணவரிடம் ‌‌ஷரிசால் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

சம்பவம் குறித்து எப்போது புகார் அளிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை என்றபோதும் சம்பவத்தை அடுத்து பத்து நாள்கள் கழித்து 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள் ‌‌ஷரிசாலைக் கைதுசெய்தனர்.

‌‌ஷரிசாலிடம் நடத்தப்பட்ட சோதனை மூலம் அவரது கைப்பேசியில் குறைந்தது 32 ஆண்களின் பாலியல் ரீதியான காணொளிப் பதிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிற ஆடவரிடம் பேசுவதற்காக ‌‌ஷரிசால் பெண்ணைப் போல தம்மைச் சமூக ஊடகங்களில் காட்டிக்கொண்டதும் விசாரணையில் புலப்பட்டது.

அந்த வகையில் இரண்டு 15 வயது இளையரின் பாலியல் ரீதியான காணொளிகளை ‌‌ஷரிசால் பதிவுசெய்தார்.

‌‌ஷரிசால் குற்றச்செயல்களுக்கு முன்னர் 17 ஆண்டுகள் காவல்துறையில் நல்ல அதிகாரியாக இருந்ததை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். அத்துடன் ‌‌ஷரிசாலுக்குப் பல்வேறு பாராட்டுகள் கிடைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி ‌‌ஷரிசால் பணியிலிருந்து விலகிக்கொண்டார்.

மானபங்கக் குற்றத்தை எதிர்கொள்ளும் ஒருவருக்கு அதிகபட்சம் மூவாண்டு சிறைத் தண்டனை, பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
பாலியல் குற்றம்காவல்துறைஅதிகாரி