விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரி ஒருவர், இருவரின் தகவல்களைப் பெற அனுமதியின்றி உள்துறை அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்தியாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2023, 2024ஆம் ஆண்டுகளில் இரு வெவ்வேறு தருணங்களில் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபரான பேட்ரிக் லிம் கெய் ஹாவ், 32 வயது யோங் யுஹெங் என்பவருடன் அத்தகவல்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டதாக நம்பப்படுகிறது. யோங் யுஹெங், குற்றச் செயல்கள் மூலம் பலனடைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தற்போது எதிர்நோக்குகிறார்.
தற்போது காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றாத 45 வயது லிம்மீது அரசு ரகசிய சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளும் கணினியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளும் நேற்று (ஜுலை 14) சுமத்தப்பட்டன.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை தொடங்கிய பிறகு முக்கிய பணிகளிலிருந்து லிம் அகற்றப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் அவர் காவல்துறையிலிருந்து பதவி விலகினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி லிம், கணினியில் உள்துறை அமைச்சின் தளத்துக்குச் சென்று சட்டவிரோதமாகத் தகவல்களைப் பெற முயன்றதாக நம்பப்படுகிறது. பிறகு சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அவர் அதேபோன்ற குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.