கையூட்டு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 34 மாதச் சிறைத் தண்டனை

2 mins read
e277fe28-502d-4c1f-879a-d991013622c0
சீன நாட்டவரிடமிருந்து $36,000 கையூட்டு வாங்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி பூ சு சியாங்கிற்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு $36,000 கையூட்டு பெற்றதற்காக ஈராண்டு 10 மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமை (ஜூன் 16) விதிக்கப்பட்டுள்ளது.

பூ சு சியாங், 47, கையூட்டாகப் பெற்ற $36,000 தொகையை அபராதமாகச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 15 வாரச் சிறைத் தண்டனையை ஆடவர் எதிர்கொள்வார்.

கடந்த ஆண்டு $32,500 கையூட்டு பெற்றதற்காக பூவுக்கு ஆறரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு அவர் கையூட்டாகப் பெற்ற தொகையை அபராதமாக செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தவறினால் 13 வார சிறைத் தண்டனையை பூ எதிர்கொண்டார்.

முதலாவதாக விதிக்கப்பட்ட தண்டனையை முடித்த பிறகு அண்மையில் விதிக்கப்பட்ட தண்டனையைப் பூ நிறைவேற்றுவார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பூ காவல்துறை அதிகாரி அல்ல என்று தற்காப்பு வழக்கறிஞர் கே. ஜெயகுமார் நாயுடு தெரிவித்தார்.

சிங்கப்பூர்க் காவல்துறையின் ரகசியக் கும்பல்களுக்கு எதிரான பிரிவில் காவல்நிலைய அதிகாரியாக இருந்தபோது பூ இரண்டு முறை கையூட்டுகளை வாங்கினார். அதையடுத்து 2020ஆம் ஆண்டு டிசம்பரில் பூ பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அண்மைய வழக்கில், சிங்கப்பூரரான பூ, ஏழு மாதங்களுக்கு சீன நாட்டவரான 39 வயது சென் குவாங்யுன்னிடம் $36,000 கையூட்டு வாங்கினார்.

அதற்குப் பதிலாகக் குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்கான விசாரணையைத் தவிர்க்க சீன நாட்டவருக்கு உதவ பூ ஒப்புக்கொண்டார்.

பூ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போக சென் 2020ஆம் ஆண்டு குடிநுழைவுக் குற்றங்களுக்காக பிடிபட்டார்.

சென்மீது ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநுழைவுக் குற்றங்களிலிருந்து தப்பிக்க கையூட்டு வழங்கினார் சீனாவைச் சேர்ந்த சென் குவாங்யுன்.
குடிநுழைவுக் குற்றங்களிலிருந்து தப்பிக்க கையூட்டு வழங்கினார் சீனாவைச் சேர்ந்த சென் குவாங்யுன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்