தேசிய வளர்ச்சிக்கான முன்னாள் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லீ இயோக் செங் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) காலமானார். மூத்த அரசியல்வாதியுமான அவருக்கு வயது 87.
1970களில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய திரு. லீ, 1972 முதல் 1991 வரை இருபதாண்டுகளாக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரை செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
மேலும், அவர் 1981 முதல் 1988 வரை அரசாங்கத் தலைமைக் கொறடாவாகவும் கடமையாற்றினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், நவம்பர் 6ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவொன்றில் திரு. லீயின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். புக்கிட் பாஞ்சாங், செம்பவாங் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகக் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பணியாற்றியது உட்பட, திரு. லீ, அர்ப்பணிப்புடனும் தெளிவான நோக்கத்துடனும் சிங்கப்பூருக்குச் சேவையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
“தேசிய வளர்ச்சி மூத்த நாடாளுமன்றச் செயலாளராக, நமது புதிய நகரங்களையும் குடியிருப்புப் பேட்டைகளையும் உருவாக்கியபோது குடும்பங்களும் வணிகங்களும் புதிய சூழலுக்கு மாறுவதற்கு உதவிசெய்து, நமது வீடமைப்பு, மறுகுடியேற்ற முயற்சிகளில் அவர் முக்கியப் பங்காற்றினார்,” என்று திரு வோங் தெரிவித்தார்.
“ஊழியர் துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றியபோது பணியிடப் பாதுகாப்பு, ஊழியர் நலன் முதலியவற்றுக்காகவும் அவர் முன்னின்று குரல் கொடுத்தார்,” என்று பிரதமர் சொன்னார்.
அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அடித்தள அமைப்புகளுடனும் பொதுமக்களுடனும் திரு லீ தொடர்ந்து அணுக்கமான தொடர்பில் இருந்ததாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
திரு லீ, மக்களுக்கு ஆற்றிய சேவையும் வரலாற்றுப் பங்களிப்பும் என்றென்றும் போற்றப்படும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது புகழாரம் சூட்டினார்.
