இசைத் தயாரிப்பாளரும் முன்னாள் ‘சிங்கப்பூர் ஐடல்’ பாட்டுத்திறன் போட்டி நடுவருமான கென் லிம் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
கென் லிம், 61, ஓர் 25 வயது பெண்ணை மானபங்கம் செய்தது நிரூபணமாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஹெண்டர்சன் ரோட்டில் இருக்கும் ‘ஹைப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லிம் ‘ஹைப் ரெக்கர்ட்ஸ்’ நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக அவர் பணியாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் என்றும் இல்லாத அளவு நம்பக்கூடியதாக இருந்ததென மாவட்ட நீதிபதி லீ லிட் செங் தெரிவித்தார். அதனால், லிம் குற்றம் புரிந்தார் என்பதில் சந்தேகம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், லிம் தனக்குச் சாதகமாக இருக்கக்கூடிய ‘ஆதாரங்களை’ முன்வைக்கக்கூடியவர் என்றும் நீதிபதி கூறினார்.
முன்னதாக, லிம் தன்னிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக வேறொரு பெண் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக லிம் சென்ற ஆண்டு போராட வேண்டியிருந்தது.
2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி ‘ஹைப் ரெக்கார்ட்ஸ்’ வளாகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் லிம் அக்குற்றத்தைப் புரியவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக லிம் மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

