இசையமைப்பாளரும் ‘சிங்கப்பூர் ஐடல்’ போட்டியின் முன்னாள் நடுவருமான கென் லிம்முக்கு 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 வயதுப் பெண்ணை மானபங்கம் செய்ததற்காக அவருக்குச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) தண்டனை விதிக்கப்பட்டது.
ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள ஹைப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. 61 வயது கென், அப்போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி என்று செப்டம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள், கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாக வெளியிடப்படவில்லை.
கென் மீதான எஞ்சிய ஐந்து குற்றச்சாட்டுகளைக் கைவிடும்படி அவரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி லீ லிட் செங், அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, அந்தக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மீண்டும் லிம் மீது குற்றஞ்சாட்ட முடியாது.
லிம், தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாக அவரின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் டான் சீ மெங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஏற்கெனவே மற்றொரு பெண் சம்பந்தப்பட்ட இன்னொரு வழக்கில் லிம் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.
2012ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஹைப் ரெக்கார்ட்ஸ் வளாகத்தில் லிம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அந்தப் பெண் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு லிம் குற்றவாளி இல்லை என்று சென்ற ஆண்டு (2024) தீர்ப்பளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மானபங்கம் செய்த குற்றத்திற்கு, ஒருவருக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ இவற்றில் இரண்டோ அனைத்துமோ விதிக்கப்படக்கூடும். இருப்பினும் லிம் 50 வயதைக் கடந்தவர் என்பதால், பிரம்படி கொடுக்கச் சட்டத்தில் இடமில்லை.

