தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஐடல் நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

2 mins read
06aba912-93d6-4340-8c25-97832f67d24b
கலைஞர்களான மூன்று பெண்களின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியது தொடர்பில் கென் லிம் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஐடல் நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர் கென் லிம் சீ சியாங் மீது புதன்கிழமை ஐந்து புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஹைப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான 59 வயது லிம், மூன்று பெண்களின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அம்மூன்று பெண்களுமே கலைஞர்கள். லிம் தனது வீட்டில் முதல் பெண்ணிடம் ஆபாசக் காணொளி ஒன்றைக் காட்டினார். ஒரு பெண் பல ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி அது.

இச்சம்பவம் 1998, 1999 வாக்கில் நடந்தது. அதே காலகட்டத்தில், ஹைப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில், அதே பெண்ணிடம் அவருக்குப் பாலியல் அனுபவம் இல்லை என்றும் தன்னால் உதவ முடியும் என்றும் லிம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

1999க்கும் 2002க்கும் இடையில், இரண்டாவது பெண்ணிடம் அவர் ஒரு கன்னியா என்று லிம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாலியல் அனுபவம் இல்லாமல் ஆழ்ந்த அர்த்தத்துடன் எப்படி அப்பெண்ணால் பாடல் எழுத முடிகிறது என்றும் தன்னை முதல் பாலியல் துணையாக ஏற்பாரா என்றும் லிம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவமும் ஹைப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் நடந்தது. அதுமட்டுமன்றி, லிம் அந்தப் பெண்ணிடம் தன்னுடைய பாலியல் ஆசைகளை வீட்டுப்பாடமாக எழுதச் சொன்னதாகவும் அந்த ஆசைகளை நிறைவேற்றும் பாலியல் துணையாக இருக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது பெண்ணின் முன்னிலையில் தனது இடுப்பு வாரைக் கழற்றுவதுபோல் லிம் பாவனை செய்தார்.

கடந்த 2013ல் நடந்த இச்சம்பவத்தின்போது, எந்த ஆதாயமும் இல்லாமல் உடலுறவு கொள்ள முடியுமானால் ஓர் ஆதாயத்திற்காக ஏன் உடலுறவு கொள்ளக்கூடாதென்று லிம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மார்ச் 20ஆம் தேதி லிம் மீது ஒரு மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்போது $10,000 பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு ஜூலை 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்