மாணவர் பராமரிப்பு நிலையப் பணத்தைக் கையாடல் செய்த முன்னாள் மேற்பார்வையாளருக்கு மூன்றரை ஆண்டுச் சிறை

மாணவர் பராமரிப்பு நிலையப் பணத்தைக் கையாடல் செய்த முன்னாள் மேற்பார்வையாளருக்கு மூன்றரை ஆண்டுச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Nov 2026 - 12:03 pm

2 mins read

தொடக்கப்பள்ளி ஒன்றில் இயங்கிய மாணவர் பராமரிப்பு நிலையத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியபோது, நிறுவனத்திற்குச் சொந்தமான 380,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தைக் கையாடல் செய்த 35 வயதுப் பெண்ணுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 23) மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘ஏஸ் அட் வொர்க் என்ரிச்மென்ட்’ (Ace@Work Enrichment) நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய தரண்யா மோகன், கையாடல் செய்த பணத்தை இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை. விசாரணைக்குப் பிறகு, 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நம்பிக்கை மோசடி செய்த நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மாணவர் பெற்றோரிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பில் தாரண்யா இருந்தார். வசூலிக்கப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்தி, அதன் ரசீதைப் படம் எடுத்து எழுத்துபூர்வமாகப் பதிவு செய்து நிறுவனத்தின் கணக்குத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்புவதும், பள்ளியின் உள் நிதி அமைப்பில் பதிவு செய்வதும் அவரது பணியாக இருந்தது. அவர் 380,000 வெள்ளிக்கும் அதிகமான நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்பள்ளியில் வசூலான தொகை வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக இருப்பதையும் மற்ற நிலையங்களின் கணக்குகளுடன் முரண்படுவதையும் கவனித்த ஒருவர், உள் தணிக்கை நடத்த உத்தரவிட்டார்.

அவ்வாண்டு மார்ச் மாதம் புக்கிட் பாத்தோக்கில் உள்ள நிறுவனத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட தாரண்யாவிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. திருடியதை ஒப்புக்கொண்ட அவர், 2019 மார்ச் 27க்குள் 300,000 வெள்ளியைத் திருப்பித் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், கெடு முடிந்தும் பணம் செலுத்தாததால் அடுத்த மாதம் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

விசாரணையின்போது, தமது தாய் வழங்கிய கடன்கள், மாமியாரின் வைப்புத்தொகை மூலமே பணம் கிடைத்ததாக தாரண்யா வாதிட்டார். நவம்பர் 23ஆம் தேதி அவருக்கு $15,000 பிணை வழங்கப்பட்டது. அவர் 2027 ஜனவரியில் தமது சிறைத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்