முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் டாங் லியாங் ஹோங் காலமானார்; அவருக்கு வயது 90.
1997ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செங் சான் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு டாங் செப்டம்பர் 15ஆம் தேதி காலமானார். வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காலமானோருக்கான குறிப்பில் திரு டாங்கின் மறைவு தெரியவந்தது. அவர் மறைவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
திரு டாங்கின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (அக்டோபர் 4) வரை நடைபெறும். தனிப்பட்ட முறையில் குடும்பத்தாருக்கான இறுதி மரியாதைச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) நடைபெறும்.
1997 தேர்தலின்போது செங் சான் குழுத்தொகுதியில் போட்டியிட்ட ஐவரைக் கொண்ட பாட்டாளிக் கட்சிக் குழுவில் திரு டாங் இடம்பெற்றார். செங் சானில் 45.18 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பாட்டாளிக் கட்சி தோல்வியுற்றது.
தேர்தலுக்குப் பிறகு திரு டாங் அன்றைய பிரதமர் கோ சோக் டோங், சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அன்றைய மூத்த அமைச்சருமான லீ குவான் யூ உள்ளிட்ட மக்கள் செயல் கட்சி (மசெக) உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவர்கள் மீது அவதூறு பரப்பியதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய திரு டாங் ஆஸ்திரேலியா சென்றார். தனது மரணம்வரை அவர் அங்கிருந்ததாக நம்பப்படுகிறது.