சிங்கப்பூரில் சிறுவர்கள், பதின்மவயதினர் ஆகியோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ‘குரோ வெல் எஸ்ஜி’ தேசிய இயக்கம், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 20 பள்ளிகளில் பயிலும் உயர்நிலை ஒன்று, உயர்நிலை இரண்டு மாணவர்களுக்கு விரிவாக்கப்படும் என்றும் பின்னர் 2028ஆம் ஆண்டில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்லப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அமைப்புமுறைக் குடும்பச் சிகிச்சை மாநாட்டில் உரையாற்றிய சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், இளையர்கள் இளம் வயதிலேயே மனநலச் சவால்களை எதிர்கொள்ளவும் மீள்திறனை வளர்த்துக்கொள்ளவும் பள்ளிகளை முக்கிய இடங்களாக வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
இளையர்களின் வாழ்க்கையில் குடும்பத்துக்கு அடுத்தபடியாகப் பள்ளிகளே முக்கியப் பங்காற்றுகின்றன என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஓங், அவர்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும் பரஸ்பர ஆதரவைப் பெறவும் தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும்போது பாதுகாப்பாக உதவி கோரவும் பள்ளிகளே தகுந்த இடமாகத் திகழ்கின்றன என்று கூறினார்.
ஏற்கெனவே பள்ளிகள் கலைத்திட்டம், ஆதரவளிக்கும் உறவுகள், பள்ளி ஆலோசகர்களின் வழிகாட்டல் மூலம் இந்த மீள்திறனை வளர்க்கும் பணிகளைச் செய்து வருகின்றன என்றும், ‘குரோ வெல் எஸ்ஜி’ இயக்கம் மூலம் இதனை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இளையர்கள் தேவைப்படும் காலத்தில் மனநல ஆதரவை எளிதில் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும். இதற்காக, சுகாதார அமைச்சு தற்போதைய சமூக மனநலக் குழுக்களை ‘ஹெல்தியர்மைண்ட் எஸ்ஜி’ என்ற ஒருங்கிணைந்த கட்டமைப்பின்கீழ் ஒரே கட்டமைப்பாகக் கொண்டுவரவுள்ளது.
இது சேவைகளைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் தனிநபர்கள் பொருத்தமான மனநல ஆதரவை எளிதாகப் பெறவும் உதவும். மனநல ஆதரவைப் பெறுவதில் சமூகத்தில் நிலவும் தவறான எண்ணமும் அவமான உணர்ச்சியுமே உடனடித் தடையாகும் என்று அமைச்சர் ஓங் யீ காங் சுட்டிக்காட்டினார்.
இளையர்கள் குணமாக விரும்பவில்லை என்பதற்காக உதவி கேட்கத் தயங்குவதில்லை.மாறாக, உதவி கேட்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பயப்படுவதாலேயே தயங்குகிறார்கள் என்றார் அமைச்சர் ஓங். இது தங்கள் எதிர்காலப் பதிவில் நிரந்தரக் கறையாகப் படிந்து பாதிப்பை ஏற்படுத்துமோ, குடும்பத்தினருக்கு ஏமாற்றமளிக்குமோ அல்லது சுற்றியுள்ளவர்களால் தவறாக மதிப்பிடப்படுவோமோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
எனவே, ஏனைய தீரா நோய்களை நிர்வகிப்பதைப் போல, பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பே தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதே நீண்டகாலத் தீர்வாக அமையும் என்றார் அவர்.
மக்கள் மனநலத்துடன் இருக்கவும் பிரச்சினைகளைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
