பின்னணியிலிருந்து உழைக்கும் முன்னேற்ற ஆதரவுக் குழு

3 mins read
11aa9912-212f-4885-8c3d-66e3729ab761
டில்பால் முகாமில் உள்ள மருத்துவ நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மிகப்பெரிய வெளிநாட்டுப் பயிற்சியான ‘எக்சர்சைஸ் வாலபி’யின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற அமைதியாக உழைக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது முன்னேற்ற ஆதரவுக் குழு.

படைப்பிரிவுகள் வருவதற்கு முன்னரே பயிற்சித்தளத்தைத் தயார்ப்படுத்தும் பொறுப்புடன் பணியமர்த்தப்படும் முன்னேற்ற ஆதரவுக் குழு, அவர்கள் புறப்பட்ட பின்னரும் பல வாரங்கள் தளத்தில் தங்கி செயல்படுகிறது.

வீரர்கள், வாகனங்கள், வெடிகுண்டுகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் ஷோல்வாட்டர் பேயின் பரந்த, சிக்கலான நிலப்பரப்பில் சுமூகமாக விநியோகிக்கப்படுவதையும் செயல்படுவதையும் உறுதி செய்வது இவர்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை நடைபெறும் இவ்வாண்டின் பயிற்சியில், 5,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள், சுமார் 500 போர் வாகனங்களும் உபகரணங்களும் பங்கேற்கின்றன.

டில்பால் முகாமில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வாகனங்கள்.
டில்பால் முகாமில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வாகனங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவற்றுக்குத் தேவையான ஆதரவினை வழங்கும் 170 பேர் கொண்ட முன்னேற்ற ஆதரவுக் குழு, சிங்கப்பூர் ஆயுதப் படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்களால் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கடுமையான சுற்றுச்சூழல் ஆய்வுத் தரங்களைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்யும் பணியை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய இக்குழு, மொத்தம் 13 அத்தியாவசியத் துறைகளில் செயல்படுகிறது. இதில் நிதி, கட்டளை மற்றும் கட்டுப்பாடு, பயிற்சித் தரங்கள், மருத்துவ ஆதரவு, தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் அடங்கும்.

களத்தில் புதுமை

இந்த ஆண்டு, ஆள் தேவையைக் குறைத்து, ஆதரவு செயல்முறைகளை மேலும் வேகமாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட புதிய மேம்பட்ட திறன்களையும் முன்னேற்ற ஆதரவுக் குழு சோதனை செய்தது.

அவற்றில் ஒன்றாகக் கையடக்க ஊடுகதிர் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு, எலும்பு முறிவு எனச் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் ராக்ஹாம்டன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. இது ஒரு மணிநேரத்திற்கும் மேல் எடுக்கும் செலவுமிக்கப் பயணமாகும்.

டில்பால் முகாமிலுள்ள மருத்துவ நிலையத்தில் இருக்கும் கையடக்க எக்ஸ்-ரே இயந்திரம்.
டில்பால் முகாமிலுள்ள மருத்துவ நிலையத்தில் இருக்கும் கையடக்க எக்ஸ்-ரே இயந்திரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்போது, கதிரியக்கவியலாளர்களாகவும் கதிரியக்க மருத்துவர்களாகவும் (Radiologists) பணிபுரியும் படைவீரர்களால் இயக்கப்படும் கையடக்க எக்ஸ்-ரே இயந்திரம், சம்பவ இடத்திலேயே துல்லியமான மருத்துவ முடிவெடுப்பைச் சாத்தியமாக்குகிறது. இந்த மேம்பாடு, அவசரம் அல்லாத மருத்துவ பயணங்களைக் குறைத்து, செயல்பாட்டுத் தடையின்றி சிங்கப்பூர் ஆயுதப் படையின் வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்த உதவுகிறது.

மற்றொன்று ‘மொபைல் ரவுண்ட்ஸ் அக்கவுண்டிங் எக்ஸ்பிரஸ்’ எனும் இயந்திரமாகும்.

‘மொபைல் ரவுண்ட்ஸ் அக்கவுண்டிங் எக்ஸ்பிரஸ்’ இயந்திரம்.
‘மொபைல் ரவுண்ட்ஸ் அக்கவுண்டிங் எக்ஸ்பிரஸ்’ இயந்திரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இது, சிறு ஆயுதங்களின் வெடிகுண்டுத் தானியக்க முறையில் கணக்கிடும் வகையில் உருவாக்கப்பட்ட, தனித்துவமான கையடக்க அமைப்பாகும். இந்தத் தொழில்நுட்பம், முன்பு வெடிகுண்டுகளைக் கைமுறையாக எண்ணுவதற்காகச் செலவிடப்பட்ட நேரத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைக்கிறது

பயிற்சிக்காகப் பின்னணியிலிருந்து உழைப்பவர்கள்

இத்தகைய மாபெரும் பயிற்சியைச் சீராக நடத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் அவசியம்.

பல முன்னேற்ற ஆதரவுக் குழுவினர் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சிக்கு முன்பிருந்து முடிவுவரை, இரண்டு மாதங்களுக்கும் மேலாக, வீட்டை விட்டு விலகி, நீண்ட காலத்திற்கு சவாலான சூழலில் பணியாற்றுகிறார்கள்.

சில நேரங்களில், தமது பணியின் நீண்ட நேரங்கள் சோர்வளிக்கக்கூடியதாக இருக்கக்கூடும் என்று செயல்பாட்டு ஆதரவுப் (Ops Support) பிரிவில் பணியாற்றும் முழு நேர தேசிய சேவையாளர் முதல்நிலை கார்ப்பரல் கவினேஷ் குணசேகரன், 23, கூறினார். காலையில் ஏறத்தாழ 7 மணிக்குத் துவங்கும் இவரது பணி, இரவு 11 மணிக்கே நிறைவடைகிறது.

செயல்பாட்டு ஆதரவுப் பிரிவில் பணியாற்றும் முழு நேர தேசிய சேவையாளர் முதல்நிலை கார்ப்பரல் கவினேஷ் குணசேகரன், 23.
செயல்பாட்டு ஆதரவுப் பிரிவில் பணியாற்றும் முழு நேர தேசிய சேவையாளர் முதல்நிலை கார்ப்பரல் கவினேஷ் குணசேகரன், 23. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“நாங்கள் சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாரம் முழுவதும் பணிபுரிகிறோம். சில நேரங்களில் 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வோம்.

“எனது குழுவினர், இப்பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் முன் முதலில் விழித்தெழுவோம், கடைசியாகவே தூங்கச் செல்வோம்,” என்று அவர் கூறினார்.

போக்குவரத்து நகர்வுகளை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் அமைப்புகள் மூலம் பிரிவுகளின் இயக்கத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் திரு கவினே‌ஷின் பொறுப்புகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள், படைப்பிரிவுகள் தங்கள் பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்த உதவும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் அத்தியாவசியமான முதுகெலும்பாக விளங்குகின்றன.

திரு கவினே‌ஷுக்கு, ஆண்டுதோறும் ஊக்கம் தமது சகாக்களுடனான தோழமையிலிருந்து வருகிறது. “நாங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து அந்த ஒற்றுமையிலிருந்து வலிமை பெறுகிறோம்,” என்று அவர் கூறினார்.

முகாமின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் பங்களிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக திரு கவினேஷ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்