நிறுவனர்கள் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது.
நினைவகம் 2028ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனர்கள் நிறுவனம் கரையோரப் பூந்தோட்டங்களில் உள்ள பே ஈஸ்ட் கார்டனில் அமைந்திருக்கும்.
இந்நிலையில், சிங்கப்பூரின் மூத்த குடிமக்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களிடமிருந்து பெற தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்.
இக்கதைகள் நினைவகத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்படும்.
நினைவகம் நடத்தும் இத்திட்டத்துக்கு புரோஜெக்ட் சிட்டிசன்ஸ்-தி ஃபர்ஸ்ட் மில்லியன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு குறைந்தது 160 தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது 60வது தேசிய தினத்தைக் (எஸ்ஜி60) கொண்டாடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனையொட்டி, இத்திட்டம் நடத்தப்படுகிறது.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்களுடன் தொண்டூழியர்கள் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசுவர்.
இத்திட்டம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெறும்.
1966ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கைக் கதைகளை எடுத்துக்கூற புரோஜெக்ட் சிட்டிசன்ஸ் இலக்கு கொண்டுள்ளது.
1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து தனிநாடானது.
அதையடுத்து, 1966ஆம் ஆண்டு மே மாதத்தில் தேசிய பதிவுச் சட்டம் நடப்புக்கு வந்தது.
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 1,101,418 பேருக்கு சிங்கப்பூர் அடையாள அட்டை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் மூத்த குடிமக்கள், நாட்டை நிறுவிய தலைமுறையினருக்கு அங்கீகாரம் வழங்க எஸ்ஜி60 நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருப்பதாக நினைவகத்தின் பங்காளித்துவ, தொடர்புப் பிரிவின் மூத்த உதவி இயக்குநர் திரு வாய் சுங் தாய் தெரிவித்தார்.
இத்தலைமுறையினர் நாட்டின் வளர்ச்சிக்குப் பேரளவில் பங்களித்ததை அவர் சுட்டினார்.
நினைவகம் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் செயல்படும் தொண்டூழியர்கள் மூத்தோரிடம் பேசி அவர்களது வாழ்க்கைக் கதைகளைச் சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை வழிநடத்துவர் என்று திரு வாய் கூறினார்.
துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் போன்ற இடங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
திட்டத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதை தெரிந்துகொள்ள தொண்டூழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார் திரு வாய்.
இதற்காக அவர்கள் ஐந்து மணி நேர பயிலரங்கில் பங்கெடுப்பர் என்று அவர் கூறினார்.
நிறுவனர்கள் நினைவகத்துக்குத் தற்போது ஏறத்தாழ 70லிருந்து 80 தொண்டூழியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொண்டூழியராகச் செயல்பட விரும்புவோர் go.gov.sg/fmvolunteer எனும் இணையபக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.


