வீட்டு வாடகையில் ஏமாற்றுவேலை; நால்வர் மீது குற்றச்சாட்டு

2 mins read
78e0c91c-64f3-44bd-a8f9-e9723b3de4fe
88,000 வெள்ளிக்கு மேல் உள்ள ரொக்கத்தையும் ஒரு மில்லியன் வெள்ளிக்கு அதிக பெறுமானமுள்ள மோட்டார் வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

விக்டோரியா பார்க் ரோட்டிலுள்ள தனியார் வீடு ஒன்றின் உரிமையாளரை ஏமாற்றியதன் பேரில் சிங்கப்பூரர் ஒருவர் மீதும் வெளிநாட்டினர் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நால்வரில் ஒருவரான 35 வயது வூ பெங்ஃபெய் மீது ஒரு குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதியன்று அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில், வீட்டை வாடகைக்கு எடுப்பதற்குரிய பத்திரத்தில் வூ கையெழுத்திட்டார்.

வீட்டுரிமையாளரை ஏமாற்ற நால்வரும் சதி செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் அந்த நால்வர், குத்தகைக்காரரை ஏமாற்றி அந்த வீடு, குடியிருப்புக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பொய்யுரைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

உண்மையில் அந்த வீட்டைத் தனியார் கேளிக்கை மன்றமாகப் பயன்படுத்த அவர்கள் எண்ணியிருந்ததாகவும் காவல்துறையினர், மார்ச் 31ஆம் தேதி வெளியிட்ட தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டனர்.

மலேசியாவைச் சேர்ந்த 35 வயது கோ ஹுய் மிங், சீனாவைச் சேர்ந்த 40 வயது சூ ஸென்டான், கம்போடியாவைச் சேர்ந்த 44 வயது சூ வென்ஹுவீ ஆகியோர், வூக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களுடன் வூ கோ ஜியாங் என்பவரும் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சூ வென்ஹுவீ மீது மூன்று குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றுவது, உரிய அனுமதியின்றி கேளிக்கை மன்றத்தில் பணியாற்றுவது, அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் 22,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்பு கொண்டுள்ள வெவ்வேறு நாணயங்களை சிங்கப்பூரிலிருந்து வெளியே நகர்த்துவது ஆகிய குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் குற்றச்சாட்டு ஒன்றை சூ எதிர்நோக்குகிறார்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று, நால்வரில் ஒரே பெண்ணான கோ மீதும், சூ ஸென்டான் மீதும் ஆளுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 பேரில் இந்த நால்வர் அடங்குவர் எனக் காவல்துறை கூறியது.

88,000 வெள்ளிக்கு மேல் உள்ள ரொக்கத்தையும் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிக பெறுமானமுள்ள இரு மோட்டார் வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்