சிங்கப்பூருக்குள் $20,000க்கும் அதிகமான ரொக்கத்தைக் கொண்டுவந்ததற்காக நான்கு வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.
ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது அவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 15) கூறினர்.
சிங்கப்பூர்க் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எல்லைதாண்டிய ரொக்கப் பரிவர்த்தனை தொடர்பான விதிமீறல், இதர எல்லைதாண்டிய சட்டவிரோதச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாற்காக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக அந்த மூன்று அரசாங்க அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் நில, ஆகாய, கடல்வழி சோதனைச்சாவடிகளில் 12,000க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் 420 வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 18,000க்கும் மேற்பட்ட பயணப்பெட்டிகளிலும் பயணிகளின் கைப்பெட்டிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நான்கு பயணிகள் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் 59 வயதுப் பெண். பல்வேறு வெளிநாட்டு நாணய நோட்டுகளை உள்ளடக்கிய $24,131.07 ரொக்கத்துடன் மே 7ஆம் தேதி அவர் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, அதுபற்றி அதிகாரிகளிடம் அறிவிக்கத் தவறினார்.
அதேபோல 65 வயது ஆடவர் மே 8ஆம் தேதி $22,497.50 ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தார். அதிலும் பல்வேறு வெளிநாட்டுப் பண நோட்டுகள் இருந்தன. மேலும், 30 வயது ஆடவர் ஒருவர் மே 10ஆம் தேதி 65,000 சிங்கப்பூர் வெள்ளியைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு சம்பவத்தில், மே 12ஆம் தேதி 52 வயது ஆடவர் $38,432.72 ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தார். அந்த நால்வரில் இருவருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் கொடுக்கப்பட்டன. மற்ற இருவருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்கள் தவிர, $5,354 மதிப்புள்ள இறக்குமதித் தீர்வையையும் பொருள் சேவை வரியையும் செலுத்தாமல் மதுபானம், சிகரெட், புகையிலைப் பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்த 43 பேர் பிடிபட்டனர்.
அவர்களுக்கு $9,740 அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

