வழக்கறிஞர் சங்கத்தில் நான்கு புதிய உறுப்பினர்கள்

வழக்கறிஞர் சங்கத்தில் நான்கு புதிய உறுப்பினர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 8:45 pm

2 mins read

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தேர்தலில் நான்கு புதிய உறுப்பினர்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.

வழக்கறிஞர் சங்கத்தின் தணிக்கை குழுவால் எழுப்பப்பட்ட புகார் தொடர்பில் காவல்துறை அதிகாரிகளின் விசாரணை நடந்துவரும் நிலையில் வியாழக்கிழமை (அக்டோபர் 22) தேர்தல் நடைபெற்றது.

2022ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வழக்கறிஞர் சங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

வேலையிடத்தில் முறைகேடான நடத்தை, வலுவில்லாத நிர்வாகம், குறிப்பிட்ட சில நிதி நடைமுறைகள் தொடர்பிலான கட்டுபாடுகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

இதற்கிடையே, ஜிம்மி யிம், டெபி லிம், ஃபூ சியென் வெங், சித்தார்த்தா போடி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சேமுவல் சாக்கோ, சூ செங் ஸி ஆகியோர் மீண்டும் மன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர் சங்கத்தில் உள்ளோர் பகடிவதைக்கு ஆளாவதாகக் கூறும் பதிவு ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணையத்தில் வெளிவந்தது.

அதையடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் முதற்கட்ட விசாரணையின்போது தலைமைத்துவம், கலாசாரம், நிர்வாகம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது தெரியவந்ததாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.

பின்னர், மேக்ஸ்வேல் சேம்பர்சில் ஒன்றுகூடிய கிட்டத்தட்ட 200 வழக்கறிஞர்கள் முழுமையான அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஒவ்வோர் அக்டோபர் மாதமும் சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக வாக்களிப்பது வழக்கம்.

வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்குச் சான்றிதழ் கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் வாக்களிப்பது கட்டாயம்.

குறிப்புச் சொற்கள்