மின்னல் தாக்கி காயமடைந்த நால்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

மின்னல் தாக்கி காயமடைந்த நால்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

1 mins read
ac5d6864-bfda-4c48-9709-9c0112cfcf58
பாசிர் ரிஸ் கடற்கரையில் மின்னல் தாக்கி ஆடவர் ஒருவர் மாண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் ரிஸ் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மின்னல் தாக்கி ஒருவர் மாண்டார். காயமடைந்தவர்கள் செங்காங் பொது மருத்துவமனையில் (SKH) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் நால்வர் குணமடைந்து வீடு திரும்பியதை மருத்துவமனை நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், பாசிர் ரிஸ் கடற்கரைக்கு அருகில் துடுப்புப் பலகையில் விளையாடிக்கொண்டிருந்த 24 வயது இளையர் ஒருவர் மின்னல் தாக்கியதில் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை சிங்கப்பூர் தற்காப்புப் படை திங்கட்கிழமையன்று (ஜூலை 6) தெரிவித்தது.

இந்த விபத்தின்போது, 13 முதல் 54 வயதுக்குட்பட்ட மேலும் அறுவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர்.

உயிரிழந்த இளையர் உட்பட ஐந்து பேர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மூவர் சீரான நிலைக்குத் திரும்பியதை அடுத்து, உடனடியாக வீடு திரும்பினர்.

தற்காலிகமாகச் சுயநினைவை இழந்திருந்த மற்றொருவர், தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஞ்சிய இரு குழந்தைகளின் உடல்நிலை குறித்து பேச மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இச்சம்பவம் நடந்தபோது மொத்தம் 8 பேர் அங்கு படகு வலித்தலிலும் துடுப்புப் பலகை விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்