சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுப்பயணச் சேவை வழங்கும் நான்கு பேருந்து நிறுவனங்கள், உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறியதால் அவை மலேசியாவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவை விரைவுப் பேருந்துச் சேவை வழங்கியதுடன், இணையத்தில் பயணச்சீட்டுகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நான்கு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.
வெளிநாட்டுப் பேருந்து நிறுவனங்கள், மலேசிய தீபகற்பத்தில் சுற்றுப்பயணிகளுக்கு இரவில் பயணச் சேவை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அவை விரைவுப் பேருந்துச் சேவை வழங்கவோ இணையத்தில் பயணச்சீட்டுகளை விற்கவோ கூடாது என்று மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு கூறியது.
மேலும், பயணிகளின் பெயர்ப் பட்டியலையும் பயண விவரங்களையும் அவை சமர்ப்பிக்க வேண்டும். பேருந்துப் பயணத்தின் தொடக்கமும் முடிவும் சிங்கப்பூரில் அமைய வேண்டும்.
அந்த நான்கு பேருந்து நிறுவனங்களின் பெயர்களை அமைப்பு வெளியிடவில்லை. உரிமங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து ஏப்ரல் 29, மே 2ஆம் தேதிகளில் அவற்றுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதுவரை, 23 சிங்கப்பூர் பேருந்து நிறுவனங்களுக்கு மலேசியாவில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விரைவுப் பேருந்துச் சேவை வழங்க மலேசியா அனுமதிக்கிறது.
இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள நான்கில் இரண்டு பேருந்து நிறுவனங்களான சிட்டிலைன் டிராவலும் லக்ஷரி கோச்சும் வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகளைக் கொண்டு மலேசியாவுக்கும் மலேசியாவிலிருந்தும் இனி தங்களால் சேவை வழங்க இயலாது எனத் தெரிவித்தன. இதற்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளை அவை மேற்கோள் காட்டின.
தடை செய்யப்பட்டுள்ள இதர இரு நிறுவனங்கள் டபிள்யுடிஎஸ் டிராவல், லியோ சிட்டி கோச் என மே 6ஆம் தேதி சீன நாளிதழான சாவ்பாவ் வெளியிட்ட செய்தி தெரிவித்தது.

