தைப்பூசத் திருவிழா என்றாலே வண்ண வண்ணக் காவடிகளும் ‘வேல் வேல்’ என விண்ணை முட்டும் முழக்கங்களும் கருத்தை ஈர்ப்பது வழக்கம்.
இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சங்களில் அன்னதானப் பணிகளும் இடம்பிடித்தன என்றால் அது மிகையில்லை.
பொழுது விடிவதற்கு முன்பே தொடங்கிவிடும் சமையல் அடுத்தடுத்து வரும் பக்தர்களின் பசியை ஆற்றுகிறது.
மலைபோல் குவிந்த காய்கறிகள், ஆளுயர அண்டாக்கள், களைப்பு தெரியாமல் உழைக்கும் தொண்டர்கள் என விரியும் இந்தக் காட்சி இறைவனுக்குச் செய்யும் தொண்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அன்னதானத் தயாரிப்பின் பின்னணியில் இருக்கும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தமிழ்முரசு நேரில் கண்டு அறிந்தது.
முன்னேற்பாடுகள்
பக்தர்கள் கிட்டத்தட்ட 12,000லிருந்து 15,000 பேர் வயிறார உண்டு செல்வதற்காக அன்னதான ஏற்பாடுகள் தைப்பூச நாளுக்கு முந்தைய நாள் நள்ளிரவு 12 மணியளவில் தடபுடலாகத் தொடங்கின.
தைப்பூசம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதற்கேற்றவாறு உணவு தயார் செய்யும் பணிகள் செவ்வனே இருப்பதாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் அன்னதான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் செல்வநாச்சியப்பன், 69, தெரிவித்தார்.
“தைப்பூசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அன்னதானத் திட்டமிடலைத் தொடங்கிவிடுவோம்.
தொடர்புடைய செய்திகள்
“காய்கறி நறுக்குதலுக்கான தொண்டூழியர்கள், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து வரும் தொண்டூழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில்கொள்வோம்,” என்று விளக்கினார் திரு செல்வநாச்சியப்பன்.
மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்ட காய்கறிகளை நறுக்கும் பணிகள் தொடங்கிய பின்னர் சோறு சமைக்கப்பட்டது.
அப்பணியில் தொண்டூழியர்கள் ஏறக்குறைய 180 பேர் கைகோத்ததாகத் திரு செல்வநாச்சியப்பன் சொன்னார்.
சமையல் வேலைகள் முடிவுபெற பிற்பகல் நான்கு மணி ஆகும் என்று கூறிய அவர் கிட்டத்தட்ட ஆறு வயதிலிருந்து இப்பணிகளைக் கண்டு வந்துள்ளார்.
தலைமுறை தலைமுறையாக அன்னதானத்திற்கு உதவிவரும் திரு செல்வநாச்சியப்பன், முன்னர் விறகு அடுப்பில் சமைத்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
சமையலறையில் உதவும் தொண்டூழியர்கள் அனைவருக்கும் இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் தெரியும் என்றார் அவர்.
சோறு வடிப்பதற்கு ஒரு குழு, காய்கறி நறுக்குவதற்கு ஒரு குழு, பாத்திரங்கள் கழுவ ஒரு குழு, பிற உணவு வகைகளைச் சமைப்பதற்கு ஒரு குழு எனத் தொண்டூழியர்கள் வெவ்வேறு வகைகளில் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
“பக்தர்கள் எங்கள் கோயிலின் சாப்பாடு மிக ருசியாக இருக்கும் என்றும் நாங்கள் சமைக்கும் முறை சிறப்பாக இருக்கிறது என்றும் கூறுவது எங்களை இன்புறச் செய்யும்,” என்று நெகிழ்ந்தார் திரு செல்வநாச்சியப்பன்.
பரங்கிக்காய் சாம்பார், காய்கறி மண்டி, வாழைக்காய்ப் பொரியல் போன்ற உணவு வகைகள் இந்த ஆண்டு தைப்பூச அன்னதானத்தில் இடம்பெற்றன.
காத்திருப்பிற்குப்பின் மனநிறைவு
நண்பகல் 12 மணியளவில் மகேசுவர பூசைக்குப் பிறகு அன்னதானம் தொடங்கியது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பக்தர்கள் மனநிறைவோடு உணவருந்தத் தொடங்கினர்.
பிற்பகல் 1.40 மணியளவில் அன்னதானத்திற்குப் பக்தர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தம் மகனுடனும் தோழியுடனும் 11.30 மணிவாக்கில் அன்னதான வரிசையில் நிற்கத் தொடங்கிய திருவாட்டி கிருஷ்ணசாமி சிவகாமி, 40, பிற்பகல்1.30 மணிக்கு சாப்பிடச் சென்றார்.
“கோயிலில் கூட்ட நெரிசல் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அன்னதானத்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. மூன்று வரிசைகளும் சேர்ந்துவிட்டதால் கூட்டம் அதிகமானது,” என்றார் திருவாட்டி சிவகாமி.
20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டூழியம்
அன்னதானத்தில் உணவு வகைகளைப் பரிமாறும் தொண்டூழியர்களுக்கு உதவும் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் இல்லத்தரசி ஏகம்மை சுப்பையா, 53.
ஒரே நேரத்தில் ஏறத்தாழ 750 பேர் அமர்ந்து உண்ணும் அளவிற்குப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகத் திருவாட்டி ஏகம்மை சொன்னார்.
தைப்பூச ஏற்பாடுகள் ஒவ்வோர் ஆண்டும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இவ்வாண்டு ஏற்பாடுகளும் கூட்ட நிர்வாகமும் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

