மோசடி: 16 வயதுச் சிறுவன் உட்பட 230 பேரிடம் விசாரணை

மோசடி: 16 வயதுச் சிறுவன் உட்பட 230 பேரிடம் விசாரணை

2 mins read
bbda2be6-0093-425f-92cc-a49b80cc0a8c
மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் www.scamshield.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது 1799 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஏறத்தாழ $9 மில்லியன் இழப்பு ஏற்படுத்திய 713க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக, 16 வயதுச் சிறுவன் உட்பட 230 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு வார கால அதிரடி நடவடிக்கையை அடுத்து, 159 ஆண்கள் மற்றும் 71 பெண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் மோசடிக்காரர்களாகவோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்க உதவியவர்களாகவோ செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

16 முதல் 77 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள் மின் வர்த்தக மோசடி, ஆள்மாறாட்ட மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, முதலீட்டு மோசடி மற்றும் வாடகை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஏழு காவல்துறைப் பிரிவுகளின் அதிகாரிகள் இந்த மாபெரும் சோதனையை நடத்தினர்.

பிடிபட்டவர்கள் மீது ஏமாற்றுதல், பணமோசடி மற்றும் உரிமமின்றி பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணை நடந்து வருகிறது. ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும், மோசடிக் கும்பல் உறுப்பினர்கள் அல்லது ஆள் சேர்ப்பவர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகளும் சிம் அட்டைகள் அல்லது சிங்பாஸ் விவரங்களை வழங்கி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு 12 பிரம்படிகள் வரையிலும் கட்டாயத் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வங்கிச் சேவைகள் மற்றும் கைப்பேசி இணைப்புகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 50,000க்கும் அதிகமாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 37,308 ஆகக் குறைந்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதேபோல் ஒட்டுமொத்த இழப்புத் தொகையும் $1.1 பில்லியனிலிருந்து $ 913.1 மில்லியனாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் www.scamshield.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது 1799 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்