சிங்கப்பூரின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடிகளில் குறைந்தபட்சம் $408,000 பணம் பறிபோயுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆராயும் பிரிவின் (எஸ்டிஆர்ஓ - STRO) அதிகாரிகள் போல பாசாங்கு செய்து நடத்தப்பட்டதாக குறைந்தபட்சம் 20 மோசடிச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதென காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) கூறியது.
காவல்துறை சீருடை அணிந்து காணொளி வாயிலாகப் பொதுமக்களை அழைக்கும் மோசடிக்காரர்கள் தங்களுக்குப் பின்னால் காவல்துறை அலுவலகம் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்.
மேலும், உண்மையான காவல்துறை அதிகாரிகளின் பெயரைச் சொல்லி தங்களை அறிமுகம் செய்யும் அவர்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் விசாரிப்பதாக காணொளி அழைப்பில் கூறுவர்.
மேலும் சில சம்பவங்களில், வங்கி ஊழியரைப்போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை அழைத்து, சந்தேகத்துக்கு இடமான பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கூறுவர்.
மேல்விசாரணைக்காக (போலி) எஸ்டிஆர்ஓ அதிகாரிகளிடம் அந்த அழைப்பை மாற்றிவிடுவதாகச் சொல்லி அதேபோல செய்வார்கள்.
பின்னர் எஸ்டிஆர்ஓ அலுவலகத்தின் அலுவலக ஆவணம் போன்ற போலியான ஆவணம் அவர்களுக்குக் காட்டப்படும். கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்திற்கான கைதாணையை வாட்ஸ்அப் வாயிலாக அவர்கள் அனுப்புவர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, சில வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறும் அல்லது சிலரிடம் ரொக்கப் பணத்தைக் கொடுக்குமாறும் அல்லது மின்னிலக்க நாணயங்களை மாற்றுமாறும் மோசடிக்காரர்கள் உத்தரவிடுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மேலும் பணத்தைச் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் வற்புறுத்தும்போது அல்லது காவல்துறையிடம் சரிபார்க்கும்போதுதான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதாக பொதுமக்கள் உணருவார்கள்.
இவ்வாறு மோசடிகள் நடத்தப்படுவதாக காவல்துறை விளக்கி உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற பல்வேறு மோசடிச் சம்பவங்களில் $3.4 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை பறிபோயுள்ளது.
கடந்த ஆண்டு இணைய வர்த்தக மோசடிகள் அதிகம் நடைபெற்றன. அது தொடர்பாக 2024ல் மட்டும் 11,665 புகார்கள் பதிவுசெய்யப்பட்டன.

