சிங்கப்பூர் காவல்துறை அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் செப்டம்பர் 25ஆம் தேதி ‘மை கம்யூனிட்டி லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைதானார் என்று தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்வதாகக் குறிப்பிட்ட காவல்துறை, புகார் அளித்தவர், குற்றப் பின்னணி பற்றிய விவரங்களை வழங்கவில்லை.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாதோருக்கு வழங்கப்படுவதுபோன்று, திரு குவேக் லீ யோங், காவல்துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மை கம்யூனிட்டி லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மசெநிதிக்கான சந்தா வழங்கப்படவில்லை என்று கழகத்திடம் கோரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மத்திய சேமநிதிக் கழகம் தெரிவித்துள்ளது.
“நாங்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களது அமலாக்க முயற்சிகளின் பயனாக, நிறுவனத்திடம் இருந்து ஓரளவு நிலுவைத் தொகையை மீட்டுள்ளோம். மீதம் உள்ள நிதியைப் பெற்றிட தொடர்ந்து செயலாற்றுவோம்,” எனவும் கழகம் மேலும் கூறியுள்ளது.
செலுத்தப்படாத மற்றும் மீட்கப்பட்ட மசெநிதி சந்தா தொகையின் விவரங்களைக் கழகம் வெளியிடவில்லை. ஆரம்ப பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும் எவ்வித சுமுகமான முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் திரு குவோக்கை திங்கள்கிழமை (அக்டோபர் 6) தொடர்புகொண்டபோது கூறினார்.
உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமான மை கம்யூனிட்டி லிமிடெட், 2020ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டது. அறநிறுவனமாக பதிவான அது, ‘மைகம்யூனிட்டி’ என்ற பெயரில் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட ஒரு மரபுடைமை சங்கத்தின் அங்கமாகும்.
குவீன்ஸ்டவுன், கிளமென்டி, தெலுக் பிளாங்கா போன்ற பகுதிகளில் இலவச வழிகாட்டிகளுடனான சுற்றுலாக்களை மை கம்யூனிட்டி லிமிடெட் ஏற்று நடத்திவருகிறது.
மரபுடைமை சார்ந்த சுற்றுலா தொகுப்புகளை உள்ளடக்கிய ‘மை கம்யூனிட்டி ஃபெஸ்டிவல்’ என்ற சமூக விழாவினை 2020ஆம் ஆண்டுமுதல் அது ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கலைகள், பாரம்பரியம் பற்றிய ஆய்வுகள், ஆலோசனைகள், கண்காட்சிகள், அரும்பொருளக வடிவமைப்பு என பற்பல சேவைகளை அது வழங்கிவருகிறது.
இந்த ஆண்டு, தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (Accountant-General’s Department) அந்த நிறுவனத்துக்கு மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் மரபுடைமைக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் குத்தகை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
மை கம்யூனிட்டியின் 2021/2022ஆம் ஆண்டறிக்கை, புதிய நிறுவனத்திற்கு நடவடிக்கைகள் அடுத்த நிதி ஆண்டில் (2022/2023) மாற்றப்பட்டு, அதன் லாப நோக்கமற்ற செயல்பாடுகள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 2022க்குப் பிறகு அதன் www.mycommunity.org.sg என்ற இணையத் தளத்தில் எந்த ஆண்டறிக்கைகளும் பதிவிடப்படவில்லை.