மோசடி வழக்கு: 85 வயது மூதாட்டிமீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

மோசடி வழக்கு: 85 வயது மூதாட்டிமீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

படம்: நெட்ஃபிளிக்ஸ்

24 Apr 2026 - 4:05 pm

2 mins read

மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டுவரும் 85 வயது மூதாட்டிமீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டியோன் மேரி ஹன்னா என்னும் அந்த மூதாட்டி தனது மகன் உட்படப் பலரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

மூதாட்டிமீது மோசடி, ஏமாற்று வேலை என 34 குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) சுமத்தப்பட்டுள்ளன. மூவரை ஏமாற்றியதாகக் கடந்த ஆண்டு அவர்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தற்போது மூதாட்டிமீது 39 குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான கான் மம் (Con Mum) என்னும் ஆவணப்படத்தின் மூலம் மூதாட்டியின் மோசடிச் செயல்கள் அம்பலமாயின.

அந்தப் படம் வெளியான பிறகு மூதாட்டி செய்த பல மோசடிச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

லண்டனில் உள்ள சமையல் கலை நிபுணரான கிரகாம் ஹார்னிகோல்ட் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவர். கிரகாம் சிறு வயது முதல் அவரது தாயைத் தேடி வருபவர்.

மூதாட்டி 2020ஆம் ஆண்டு கிரகாமைப் பிரிட்டனில் சந்தித்து தாம்தான் அவருடைய தாய் என்று கூறியுள்ளார். தாம் புருணை அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறிய மூதாட்டி, கிரகாம் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் மூதாட்டி கிரகாமிடமிருந்து ஆயிரக் கணக்கில் ரொக்கத்தைப் பெற்றுள்ளார்.

இதேபாணியில் மூதாட்டி சிங்கப்பூரிலும் சிலரை ஏமாற்றிப் பெரிய அளவில் ரொக்கத்தைப் பெற்றுள்ளார்.

மரபணுச் சோதனையில் கிரகாமின் உண்மையான தாய் ஹன்னா என்பதும் உறுதியானது.

மூதாட்டி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிமோசடிவிசாரணை