மோசடிக் குற்றம்: சந்தேக நபர்கள் இருவரை சிங்கப்பூரிடம் ஒப்படைத்த மலேசியா

மோசடிக் குற்றம்: சந்தேக நபர்கள் இருவரை சிங்கப்பூரிடம் ஒப்படைத்த மலேசியா

2 mins read
a905ff5c-6878-43ed-83b1-9a3c151406ec
சந்தேக நபர்கள் இருவரையும் சிங்கப்பூரின் புதிய இணைய மோசடிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தனர். - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர்வாசிகளைக் குறிவைத்து மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரும் 38 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட மலேசியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் மலேசியக் காவல்துறை புதன்கிழமையன்று (ஜூலை 8) ஒப்படைத்தது.

சந்தேக நபர்கள் இருவரையும் சிங்கப்பூரின் புதிய இணைய மோசடிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தனர்.

இருவருக்கும் எதிராக சிங்கப்பூர் அரசு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருந்ததாக வியாழக்கிழமை (ஜூலை 9) காலை காவல்துறை கூறியது.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியக் காவல்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை நடத்தியது. அதில் 16 மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடிக் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. $1.4 மில்லியனுக்கும் அதிகமான இழப்புக்குக் காரணமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் இந்த 16 பேருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் மலேசியக் காவல்துறை சந்தேகிக்கிறது.

சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இருவர் மீது வியாழக்கிழமை (ஜூலை 9) குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் காவல்துறைக்கும் மலேசியக் காவல்துறைக்கும் இடையே உள்ள மிக வலுவான பங்காளித்துவத்தை இந்த இரு சந்தேக நபர்களின் கைது காட்டுவதாக சிங்கப்பூர் காவல்துறையின் மூத்த உதவி ஆணையர் ஜஸ்டின் வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரைக் குறிவைத்து மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மற்ற நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதைச் சிங்கப்பூர் காவல்துறை தொடரும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமோசடிகைது