மின்னிலக்க மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்ததாகத் தமது நண்பர் கூறியதைக் கேட்டு, அதனைப் பயன்படுத்தியே அவரிடமிருந்து பயணத்தைச் சுருட்ட ஆடவர் ஒருவர் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
43 வயது வாசுதேவன் சகாதேவன் என்னும் அந்த ஆடவர், மின்னிலக்க நாணய மோசடியில் இழந்த பணத்தைத் தாம் மீட்டுத் தர உதவுவதாக 69 வயதான தமது நண்பரிடம் கூறினார்.
தமது ‘டிஎஸ்9 டெக்னாலஜி’ நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர உதவுவதாகக் கூறிய வாசுதேவன், அதற்காக சட்டபூர்வக் கட்டணங்கள், சாட்சி பாதுகாப்பு மற்றும் பிற நிர்வாகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று தமது நண்பரிடம் கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தமது நிறுவனத்தின் மூலம் மோசடி செய்தவரைக் கண்டுபிடிக்க நார்வேயைச் சேர்ந்த ஒரு தனிப்பட்ட புலனாய்வாளரை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகவும் சாட்சி இழப்பீடு மற்றும் பாதுகாப்புச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வாசுதேவனின் நண்பர் $112,500 தொகையை ‘டிஎஸ்9 டெக்னாலஜி’யின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசுதேவனின் மோசடித் திட்டம் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. ஆனாலும், இது தொடர்பான புகார் வந்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 21ஆம் தேதி வாசுதேவன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இந்த வழக்கு நவம்பர் 20ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
