தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி, சட்டவிரோதக் கடன் தொழில்: 536 பேரிடம் காவல்துறை விசாரணை

1 mins read
e55d37ef-eb8c-4d73-a3ce-350fd3e22381
பிடோக் காவல்துறைப் பிரிவு நடத்திய சோதனையில் சிக்கியோரில் 184 பேர் பெண்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிகளிலும் சட்டவிரோதக் கடன்கொடுக்கும் தொழிலிலும் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 536 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பொதுமக்கள் $12.2 மில்லியன் பணத்தை இழந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பிடிபட்டவர்களில், இணைய வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, வேலை மோசடி, வாடகை மோசடி, இணைய ஊடுருவல் மோசடி போன்றவை உள்ளிட்ட 2,400க்கும் மேற்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 391 சந்தேக நபர்களும் அடங்குவர்.

$12 மில்லியனுக்கும் மேற்பட்ட கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றங்களிலும் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது.

அவர்கள் தவிர, இதர 145 பேர் உரிமம் இன்றி கடன் கொடுக்கும் தொழிலிலும் கடன் மோசடிகளிலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த இரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் $250,000க்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ளனர்.

விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டவர்களில் 36 பேர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். அவை எந்த மாதிரியான குற்றங்கள் என்று காவல்துறை விவரிக்கவில்லை.

காவல்துறையிடம் சிக்கிய 536 பேரும் 16 வயதுக்கும் 81 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மேலும், அவர்களில் 184 பேர் பெண்கள்.

ஜூன் 30 முதல் ஜூலை 11 வரை பிடோக் காவல்துறை பிரிவு மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

குறிப்புச் சொற்கள்