வெளிநாட்டு மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் தைவான் நாட்டைச் சேர்ந்த இருவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 4) சுமத்தப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பல உயர்ரக ஆடை, நகை கடைகளிலிருந்து விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்காகத் தொடர்பில்லா கட்டண முறையில் திருடப்பட்ட கடன் அட்டை விவரங்களைப் பயன்படுத்தும் மோசடிக் கும்பலுடன் இணைந்து அவர்கள் இருவரும் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.
மரினா பே சேண்ட்சில் இருக்கும் லூயிஸ் உய்ட்டன் கடைக்கு 25 வயது லு மின்-டாவும் 27 வயது லு யூ-டிங்கும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்றனர்.
அங்கு கடன் அட்டை விவரங்களைப் பயன்படுத்தி $2,575 பெறுமானமுள்ள காலணிகள், காற்சட்டை வார் ஆகியவற்றை அவர்கள் வாங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்த இணையர் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் வந்ததாகக் காவல்துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விலையுயர்ந்த பொருள்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து சந்தேகத்திற்கிடமான கடன் அட்டைப் பரிவர்த்தனை தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அதனைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் அவர்கள் இருவரும் ஏப்ரல் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து காலணிகள், கைப்பைகள், காதணிகள், கைப்பேசிகள் போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை பேச்சாளர் கூறினார்.

