மோசடிக்காரர்கள் அல்லது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதில் ஈடுபட்டோர் என சந்தேகிக்கப்படும் 200க்கும் அதிகமானோரைக் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சந்தேக நபர்கள் தொடர்பிலான மோசடிச் சம்பவங்களில் $3.89 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மக்கள் இழந்துள்ளனர்.
70 பெண்களையும் 153 ஆண்களையும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். 15லிருந்து 89 வயதுக்கு உட்பட்ட அவர்கள், 790க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
நண்பர்களைப் போலவும் அரசாங்க அதிகாரியைப் போலவும் ஆள்மாறாட்டம் செய்வது, முதலீடு, வேலை, மின் வர்த்தகம், வாடகை போன்ற மோசடிகள் ஆகியவை சந்தேக நபர்கள் பெரும்பாலும் புரிந்த குற்றங்கள் என்று காவல்துறை சொன்னது.
இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை இடம்பெற்ற இரண்டு வார சோதனை நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர். வர்த்தக விவகாரப் பிரிவும் ஏழு காவல்துறை நிலப் பிரிவுகளும் சோதனைகளை மேற்கொண்டன.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றது, உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்கியது ஆகியவற்றுக்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றுக் குற்றத்துக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்ற குற்றத்துக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை, $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்கும் குற்றத்துக்கு மூவாண்டு வரை சிறைத் தண்டனை, $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அடுத்தவர்களின் பயன்பாட்டுக்கு வங்கிக் கணக்கையோ தொலைபேசி எண்ணையோ வழங்கும்படி பெறப்படும் கோரிக்கைகளை நிராகரிக்கும்படி காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது.
மோசடி தொடர்பான தாகவல்கள் உள்ளோர் காவல்துறையை 1800-255-0000 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.