பத்துக் காசு வைப்புத்தொகை முத்திரை கொண்ட ஒரேயொரு பானக்கொள்கலனை வருடி, முத்திரை இல்லாத பல கொள்கலன்களை ஆடவர் ஒருவர் திரும்பக் கொடுக்கும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அவற்றுக்குரிய இயந்திரங்களைத் திட்டமிட்டுத் தவறாகக் கையாளும் ஏமாற்றுச் செயல்களைக் கடுமையாக எடுத்துக்கொள்வதாகப் பானக் கலனைத் திரும்பத் தரும் திட்டத்தை நடத்தும் பிசிஆர்எஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்துள்ளது.
அந்த ஆடவரின் செயலைக் காட்டும் இணையக் காணொளிகள் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறியது.
அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, “இந்தச் சம்பவத்தின் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து எங்களால் கூடுதல் கருத்துத் தெரிவிக்க இயலாது,” என்று அந்நிறுவனம் பதிலளித்தது.
அனைத்து இயந்திரங்களிலும் மின்னிலக்கப் பரிவர்த்தனைப் பதிவுகள், 24 மணி நேரக் கண்காணிப்புக் கருவி, ஏமாற்றுச் செயல்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
“வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனை முறைகளைக் கண்டறிய, எங்களின் கட்டமைப்பில் உள்ள அனைத்துத் தரவுகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எந்தவோர் ஏமாற்றுச் செயலும் விசாரணைக்காகவும் தகுந்த நடவடிக்கைக்காகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்,“ என்று அந்நிறுவனம் கூறியது.
நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து, அந்தக் காணொளி ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
“உண்மையாக மறுசுழற்சி செய்யவும் முறையாகக் கொள்கலன்களைத் திருப்பியளிக்கவும் முயற்சி செய்யும் பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் என்பதால், இயந்திரங்களைத் திட்டமிட்டுத் தவறாகக் கையாள்வது அல்லது ஏமாற்றிப் பணம் கோருவது கடுமையாகக் கையாளப்படும்,” என்று ‘பிசிஆர்எஸ்’ நிறுவனம் கூறியது.
