சிங்கப்பூர் நில ஆணையம் அனுப்பிய கடிதத்தின் மூலம், தமது காத்தோங் தரைவீட்டின்மீது கடன் நிறுவனம் ஒன்று ‘கேவியட்’ எனும் உரிமைத் தடை ஆணையைப் பதிவு செய்துள்ளதை அறிந்து திரு எல்கர் குவெக், 49, அதிர்ச்சியடைந்தார். தமது தாயாருடன் இணைந்து அவர் அந்த வீட்டை வாங்கினார்.
தன்னுரிமைத் தொழில் செய்யும் வயலின் கலைஞரான அவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழி ஒருவர் $2.9 மில்லியன் கடன் பெற முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
அந்த நபர், திரு குவெக்கின் பெயரில் இரு போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, 2025ஆம் ஆண்டு $170,000 வருமானம் ஈட்டியதாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
மேலும், திரு குவெக் வீட்டின் உடைமைப் பத்திர நகலைப் பெற வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றையும் அந்த மோசடிப் பேர்வழி நாடியிருந்தார். ஏப்ரல் 1ஆம் தேதி, திரு குவெக்கின் இல்லத்தில் படப் பிடிப்பு நடத்துவதாகக் கூறி, சொத்து மதிப்பீட்டாளர் ஒருவரை அனுப்பி வீட்டின் அளவுகளை மோசடிக் கும்பல் ரகசியமாகச் சேகரித்துள்ளது.
அந்த வீட்டை படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காகத் திரு குவெக் வாடகைக்கு விட்டிருந்தார்.
இதேபோன்றதொரு போலி அடையாள அட்டை முறையைப் பயன்படுத்தி, மற்றொரு பெண்ணின் பெயரிலும் வெளிநாட்டு வங்கியிலிருந்து $2 மில்லியனுக்கும் அதிக கடன் பெற முயன்றதும் அம்பலமானது.
தற்போது, திரு குவெக் வீட்டின்மீது பதிவுசெய்யப்பட்ட உரிமைத் தடை ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் நில ஆணையமும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையமும் காவல்துறையும் தீவிரக் குற்றப் புலனாய்வு விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வழக்கறிஞர் நிறுவனங்கள் தங்களின் கடமை தவறாமல் உரிய முறையில் பின்னணிச் சரிபார்ப்புகளைச் செய்திருக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

