திருடப்பட்ட கடன் அட்டை விவரங்களைப் பயன்படுத்தி, கைப்பேசிச் செயலி மூலம் மோசடிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 28 வயது தைவானிய ஆடவர் ஒருவரும் 24 வயதுடைய இரண்டு சிங்கப்பூர் ஆடவரும் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர் ஒருவர் தமது கடன் அட்டை மூலம் $5,697 மதிப்பிலான இரண்டு அனுமதியற்ற பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. மத்தியக் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியோடு தைவானிய ஆடவரை அடையாளம் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்தத் தைவானிய ஆடவர் வெளிநாட்டுக் கும்பல் ஒன்றின் வழிகாட்டுதலின்படி, திருடப்பட்ட கடன் அட்டை விவரங்களை கைப்பேசிச் செயலியில் பதிவிறக்கம் செய்து, என்எஃப்சி தொழில்நுட்பம் மூலம் மூன்று ஐஃபோன் 17 புரோ மேக்ஸ் கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், தங்க நகைகளை மோசடிப் பரிவர்த்தனைகள் மூலம் வாங்கியது தெரியவந்தது.
இவ்வாறு வாங்கிய பொருள்களை அவர் மற்ற இரு சிங்கப்பூர் ஆடவரிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் அதனைச் சிங்கப்பூரிலுள்ள அடையாளம் தெரியாத நபர்களிடம் சேர்க்க முயன்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பேசிகள், மின்னிலக்கச் சாதனங்கள், $57,000 ரொக்கம் மற்றும் மோசடி மூலம் வாங்கப்பட்ட தங்க நகைகள், ‘வயர்லெஸ் இயர்போன்கள்’ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவரும் சனிக்கிழமையன்று (ஜூன் 13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஏமாற்றுவதற்குச் சதித் திட்டம் தீட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவை அனைத்தும் விதிக்கப்படலாம்.

