பல பில்லியன் டாலர் மதிப்பிலான பன்னாட்டு மோசடிக் கும்பலின் தலைவனான சென் சீயின் முக்கியக் கூட்டாளியான சென் சொக்லி என்பவருக்குச் சிங்கப்பூரில் பேரளவிலான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில் இத்தகவல் வெளிவந்துள்ளது. கம்போடியாவைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்தச் சட்டவிரோதக் கும்பல், மனிதக் கடத்தல் மூலம் வெளிநாட்டினரைக் கட்டாயப்படுத்தி மோசடிகளில் ஈடுபடுத்திப் பல பில்லியன் டாலர்களை முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்துள்ளது.
1986ஆம் ஆண்டில் சீனாவின் ஷாங்காயில் பிறந்த சென் சிங், கம்போடியக் குடியுரிமை பெற்ற பிறகு சென் சொக்லி எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். சிங்கப்பூரில் இவர் ‘மார்ட்டின் சென்’ எனும் செல்வந்தராக அறியப்பட்டார்.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் லீடன் ஹைட்ஸ் கூட்டுரிமைக் குடியிருப்பில் $11 மில்லியன் மதிப்பில் சொகுசு வீடு ஒன்றைச் சென் சொக்லி வாங்கினார். மேலும், ‘எம் கெப்பிட்டல் குளோபல் ஹோல்டிங்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி $5 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்துள்ளார்.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 16 நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றிய இவர், பென்ட்லி, சொகுசு ஏழு இருக்கை வாகனம் உள்ளிட்ட பல ஆடம்பரக் கார்களையும் வைத்திருந்தார். இவரது மகன் இங்குள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றில் பயின்றார்.
சட்ட அமலாக்கப் பிரிவுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மோசடிக் கும்பலுக்குச் சாதகமான நிலையை உறுதி செய்வது போன்ற காரியங்களில் சென் சொக்லி ஈடுபட்டுவந்துள்ளார்.
அதிகாரிகளுக்குச் சொகுசுப் படகு மற்றும் கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென் சொக்லி தற்போது அமெரிக்காவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கம்போடியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘ஹுவீயோன்’ நிதிச் சேவை நிறுவனம், சட்டவிரோதக் கும்பல்களின் பணமாற்று மையமாகச் செயல்பட்டதாகக் கூறி அமெரிக்க அரசாங்கம் அதன்மீது கடுமையான தடைகளை விதித்துள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 2025ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மோசடிகள் மூலம் பெறப்பட்ட குறைந்தது 4 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்நிறுவனம் பணப்பரிமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதித் துறையின் நிதிக்குற்ற அமலாக்கப் பிரிவு, இந்நிறுவனத்தை குற்றவாளிகள் தங்களின் சட்டவிரோத மின்னிலக்க நாணயங்களை நேரடிப் பணமாக மாற்றப் பயன்படுத்திய மையமாக அடையாளப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று இந்நிறுவனத்தின் கிளை அமைப்புகள் பயன்படுத்தி வந்த கணினித் தரவுத் தளக் கணக்குகளை அமெரிக்க நீதித் துறை கைப்பற்றியது.
முன்னதாக, ‘பிரின்ஸ் குரூப்’ நிறுவனத்தின் தலைவர் சென் சீ கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டதைப் போல, ஹுவீயோன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லீ சியோங் என்பவரும் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.


