கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தனது பாண்டாபுரோ (Pandapro) தளத்துக்கு விண்ணப்பம் செய்தோருக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை ஃபூட்பாண்டா உணவு விநியோகச் சேவை திருப்பித் தரும்.
பாண்டாபுரோவுக்கு விண்ணப்பிக்க மாதந்தோறும் 4.99 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது என்று சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையம் புதன்கிழமையன்று (நவம்பர் 20) தெரிவித்தது. முதல் மாதக் கட்டணம் ஒரு வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
பாண்டாபுரோ மூலம் எல்லா உணவகங்களிலிருந்தும் வாங்கப்படும் உணவும் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், விநியோகக் கட்டணத்தில் மூன்று வெள்ளிக் கழிவு மட்டுமே வழங்கப்பட்டது; சில உணவகங்களுக்கு ஆறு வெள்ளிக் கழிவு வழங்கப்பட்டது.
அதன் தொடர்பில் வந்த புகாரைத் தொடர்ந்து, தவறான கண்ணோட்டத்தைத் தந்த விளம்பரங்களை வெளியிட்டதற்காக சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையம், ஃபூட்பாண்டாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.