4,500 இளையர்களுக்கு இலவச புரதபானம்

ஃபேர்பிரைசின் முன்னோடித் திட்டம்

4,500 இளையர்களுக்கு இலவச புரதபானம்

2 mins read
48788169-cf5d-46de-9ca5-ab1dabffc8b4
ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு வரும் சமூகத்துக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. - படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களுக்கு இலவசமாக புரத பானங்களை வழங்கும் முன்னோடித் திட்டத்தை ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் தொடங்கி உள்ளது.

தகுதிபெறும் 12 முதல் 18 வயது வரையுள்ள 4,500 இளையர்களுக்கு புரத பானங்களுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 31 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சியர்ஸ்’ அங்காடிகளில் பற்றுச்சீட்டுகளைக் காட்டி பானங்களைப் பெறலாம்.

வசதிகுறைந்த இளையர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேசியர் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), மெண்டாக்கி ஆகிய சுயஉதவி அமைப்புகள் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த இளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள 44 ‘சியர்ஸ்’ அங்காடிகள் இதில் பங்கெடுக்கின்றன. இளையர்கள் உடல்நலத்துடன் வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்று அறநிறுவனத்தின் பொது மேலாளர் ஜீன் கோங் தெரிவித்தார்.

அன்றாட வாழ்க்கையிலும் படிப்பிலும் இளையர்கள் சிறந்து விளங்க, அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சத்துள்ள பானங்களை எளிதாகப் பெற வழிசெய்வது இத்திட்டத்தின் நோக்கம் என்று ‘சியர்ஸ்’ பொது மேலாளர் காரென் ஓங் கூறினார்.

பள்ளி தொடங்குவதற்கு முன்னர் சத்துமிக்க காலை உணவும் புரத பானமும் உண்பது வகுப்பில் கவனம் செலுத்த உதவுவதாக உயர்நிலை 1ல் பயிலும் பக்கிரிசாமி இன்பஸ்ரீ கூறினார்.

“புதிய உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்க இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது,” என்று அவர் நன்றிதெரிவித்தார்.

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்கு (பிஎஸ்எல்இ) முன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செப்டம்பரில் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஃபேர்பிரைஸ் கூறியது. தேர்வு காலத்தில் சியர்ஸ் காலை உணவு மன்றம் 12,000க்கும் அதிகமான காலை உணவு வழங்கும்.

குறிப்புச் சொற்கள்