சிறிய, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் ஊழியரணி மேம்பாட்டுத் திட்டங்களைக் கட்டணமின்றிப் பெற புதிய முன்னெடுப்பை அறிவித்துள்ளது ஓசிபிசி வங்கி.
‘ஓசிபிசியுடன் உங்கள் பாதையை வளருங்கள்’ (“Grow your way with OCBC”) என அழைக்கப்படும் இத்திட்டம், நிறுவனங்களின் தற்போதைய, எதிர்காலத் தேவைகளுக்கு ஆதரவளிக்க உகந்த திறன்களைக் கொண்ட ஊழியரணியை உருவாக்கும் இலக்கு கொண்டுள்ளது.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் கற்றல் நடுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் நவம்பர் 4ஆம் தேதி ஓசிபிசி வளாகத்தில் தொடங்கப்பட்டது. பிரதமர் அலுவலக மூத்த துணையமைச்சரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் துணைத் தலைமைச் செயலாளருமான (deputy secretary-general) டெஸ்மண்ட் டான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திறமையான ஊழியர்களை ஈர்ப்பதிலும், அதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ந்துவரும் சவால்களை எதிர்நோக்கும் வேளையில் இது தொடங்கப்பட்டுள்ளது.
“தொழில்நுட்ப மாற்றங்கள், மாறிவரும் எதிர்பார்ப்புகள், மின்னிலக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பொருளியல் சூழல் ஆகியவற்றுக்கு ஏற்பச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குரிய திறன்களையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வது போட்டித்தன்மையுடன் திகழ இன்றியமையாததாகிவிட்டது,” என்றார் ஓசிபிசி வங்கியின் உலகளாவிய வர்த்தக வங்கிச் சேவைப் பிரிவுத் தலைவர் இலெய்ன் ஹெங்.
பயிற்சிக்கான செலவுத் தடைகளைக் களையும் நோக்கில் இத்திட்டம் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. பன்னிரண்டு மாத கால அளவில், பங்கேற்பாளர்கள் கற்றல் நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், வல்லுநர்கள் வழிநடத்தும் அமர்வுகளில் பங்கேற்கலாம். இதன்வழி வணிக வளர்ச்சி, மின்னிலக்க உருமாற்றம், வணிக மீள்திறன், தலைமைத்துவம் ஆகியவற்றில் முக்கியத் திறன்களை அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.
ஆண்டுக்கு 20 மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் குறைவான மொத்த விற்பனைத் தொகையைக் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 20,000 நிறுவன உரிமையாளர்களும் ஊழியர்களும் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஓசிபிசியுடனான பங்காளித்துவத்தின் மூலம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஓசிபிசியின் இலவசப் பயிற்சித் திட்டம் தொழில்துறைக்கு உகந்த பயிற்சிகளை நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இதன்வழி, தலைமைதாங்கவும், சூழலுக்கேற்ப மாறவும், மீள்திறனை உருவாக்கவும் தேவையான தொழில்நுட்ப ஆற்றல்களையும் மனித நுண்ணறிவையும் கட்டமைக்கிறோம்,” என்றார் என்டியுசி கற்றல் நடுவத் தலைமை நிர்வாகி ஜெரமி ஓங்.
