சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா இடையே நிலவும் வலுவான வர்த்தக, பொருளியல் உறவுகளை விரிவுபடுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (மார்ச் 2) சிங்கப்பூருக்கு வருகையளித்த தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்குடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் வோங், கடந்த 20 ஆண்டுகளில் உலகளாவிய வர்த்தகச் சூழல் கணிசமாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
விநியோகச் சங்கிலி மீள்திறன், மின்னிலக்க வர்த்தகம் மற்றும் பசுமைத்திட்டத்துக்கு மாறுவது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், 2006ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த 20 ஆண்டுகள் பழமையான இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்கொரியாவில் அதிபராகப் பதவியேற்ற பிறகு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள திரு லீ, இந்த ஒப்பந்த மேம்பாடு மாறிவரும் வர்த்தகம், பொருளியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் என்றும் இரு நாடுகளின் முதலீட்டு ஒத்துழைப்பை உத்திபூர்வமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.
தற்போது தென்கொரியாவும் சிங்கப்பூரும் அந்தந்த நாடுகளின் முதல் 10 முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக உள்ளன.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக தென்கொரியாவும் தென்கொரியாவின் ஒன்பதாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூரும் இருந்தன.
2020ஆம் ஆண்டு முதல் தென்கொரியாவில் சிங்கப்பூரின் முதலீடுகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர் துறைமுக ஆணையம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேப்பிட்டலேண்ட் போன்ற நிறுவனங்கள் தளவாடங்கள், விமானப் போக்குவரத்து ஆகியவற்றுடன் நிலச் சொத்துத் துறைகளில் தென்கொரிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, ஹியூண்டே, லோட்டே குழுமம், ஹன்வா ஓஷன் போன்ற தென்கொரிய நிறுவனங்கள், தென்கிழக்கு ஆசியாவிற்கான ஒரு வட்டார மையமாகச் சிங்கப்பூரைப் பயன்படுத்தி வருகின்றன.
விநியோகச் சங்கிலி மீள்திறன், பசுமைப் பொருளியல், வர்த்தக வசதி, விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு ஆகிய துறைகளில் மேம்படுத்தப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கியமாக, சிங்கப்பூரின் நீண்டகால எரிசக்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக அணுசக்தி ஆற்றலின் திறனை ஆராய்ந்து வருவதாகவும் இதில் தென்கொரியாவின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் பிரதமர் வோங் கூறினார். இதற்கான ‘அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ விரைவில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதலீட்டு ஒத்துழைப்புக்கு தென்கொரிய மேம்பாட்டு வங்கி, தெமாசெக் ஆதரவு பெற்ற செவியோரா ஹோல்டிங்ஸ் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பு தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவிற்கும் இடையே 1975ஆம் ஆண்டில் அரசதந்திர உறவுகள் தொடங்கப்பட்டன. அந்த உறவின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவை உத்திபூர்வப் பங்காளித்துவத்துக்கு உயர்த்தின.
அதிபர் லீ தனது உரையில், “21ஆம் நூற்றாண்டின் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சிங்கப்பூரும் தென்கொரியாவும் நம்பகமான பங்காளிகளாகத் திகழ முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 1) சிங்கப்பூர் வந்த அதிபர் லீ மற்றும் அவரது மனைவி கிம் ஹியே கியூங் ஆகியோரைத் தற்காலிக கலாசார, சமூக மற்றும் இளையர் துறை அமைச்சர் டேவிட் நியோ வரவேற்றார்.
திங்கட்கிழமை (மார்ச் 2) காலை, டங்ளினில் உள்ள வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்தினமும் அவரது மனைவி திருவாட்டி ஜேன் இட்டோகியும் தென்கொரிய அதிபரையும் அவரது மனைவியையும் வரவேற்றனர்.
அதிபர் லீ மற்றும் அவரது மனைவியைக் கௌரவிக்கும் வகையில் ஆர்க்கிட் மலர் ஒன்றுக்கும் ‘வாண்டா லீ ஜே மியுங் கிம் ஹீ கியுங்’ என்று பெயரிடப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, சுற்றுப்புறம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஐந்து புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

