வடகிழக்குப் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) பாதையின் சில நிலையங்கள், செங்காங்-பொங்[Ϟ]கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) பாதை நிலையங்கள் ஆகியவற்றில் பயணத்தைத் தொடங்குவோருக்கு விரைவில் கட்டணம் செலுத்த தேவையிராது.
பொங்கோல் கோஸ்ட், பொங்கோல், செங்காங், புவாங்கொக், ஹவ்காங், கோவன் எம்ஆர்டி நிலையங்களிலும் செங்காங்-பொங்கோல் பாதையின் எல்ஆர்டி நிலையங்களிலும் உச்சநேரமற்ற வேளைகளில் பயணத்தைத் தொடங்குவோருக்கு இந்த ஏற்பாடு பொருந்தும். தொடக்கப் பயணம் இலவசமாக இருக்கும்.
வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து இந்த ஏற்பாடு நடப்புக்கு வரும். சம்பந்தப்பட்ட எம்ஆர்டி நிலையங்களில் வார நாள்களில் காலை 7.30 மணிக்கு முன்னர் அல்லது காலை ஒன்பது மணியிலிருந்து 9.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த ரயில் நிலையங்களில் பயணத்தைத் தொடங்குவோர் முதல் பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம்.
காலை நேர உச்சநேரத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் இந்த இலவச ரயில் சேவை ஏற்பாடு அடங்கும். பொது விடுமுறை நாள்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தாது.
வடக்கு-கிழக்குப் பாதை ரயில்களில் உச்சநேரக் கூட்டத்தைக் குறைக்கும் நோக்கில் உச்சநேரத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்கப் பயணிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன்வழி மற்ற பயணிகள் சிலர் கூட்டம் காரணமாக ரயில்களில் ஏற முடியாமல் போகும் சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், இலவச ரயில் பயணத் திட்டம் குறித்து சனிக்கிழமை பொங்கோல் கோஸ்ட் பேருந்து முனையத்தில் அறிவித்தார். குறைந்தது ஓராண்டுக்கு இந்த அறிமுகத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்றும் பிறகு திட்டம் மறுபரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலவச ரயில் பயணங்களை மேற்கொள்ளப் பதிவுசெய்யத் தேவையில்லை. பயணத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒரே பயண அட்டை அல்லது பயண முறையைப் பயன்படுத்தினால் போதும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
இத்திட்டத்துக்கான முழு நிதியை அரசாங்கம் வழங்கும் என்றும் ஆணையம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வடக்கு-கிழக்குப் பாதையில் பயணம் செய்வோருக்கு நடப்பில் உள்ள டிஎஸ்ஜே எனும் அறிவார்ந்தப் பயணங்கள் திட்டத்தில் சேர்வதும் எளிதாக்கப்படுகிறது. அத்திட்டம், குறிப்பிட்ட பொதுப்போக்குவரத்துப் பாதைகளில் பயணம் செய்வோருக்கு 80 விழுக்காடு வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
உச்சநேரத்தில் வடக்கு-கிழக்குப் பாதையில் எம்ஆர்டி பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க ஊக்குவிக்கும் டிஎஸ்ஜே திட்டத்துக்குத் தகுதிபெறுவதற்கான நிபந்தனைகள் அகற்றப்படுகின்றன.
இதுவரை அத்திட்டத்துக்குத் தகுதிபெற பயணிகள் காலை 7.15லிருந்து 8.45 மணிக்கு இடையே சம்பந்தப்பட்ட ஆறு வடக்கு-கிழக்குப் பாதை நிலையங்கள் அல்லது செங்காங்-பொங்[Ϟ]கோல் எல்ஆர்டி நிலையங்களில் கடந்த 30 நாள்களில் குறைந்தது ஆறு நாள்களில் பயணத்தைத் தொடங்கியிருக்கவேண்டும். இந்நிபந்தனை உடனடியாக விலக்கப்படுகிறது.
இனி எல்லாப் பயணிகளும் சிம்பிளிகோ செயலி மூலம் உடனடியாக டிஎஸ்ஜே திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம்.