சிங்கப்பூர் அரசாங்கம், ரயிலில் ஏற்படும் நெரிசலைச் சமாளிப்பதற்காக இலவசப் பயணங்களை அறிமுகப்படுத்தியது. அதற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார்.
மத்தியக் கிழக்கு பூசல்கள் மோசமடைந்தால் சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஆதரவுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
வடகிழக்கு ரயில்களில் காலை நெரிசல் இல்லாத நேரங்களில் இலவசமாகப் பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
“இது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நெரிசல் 9 விழுக்காடு வரை குறைந்துள்ளது,” என்று திரு சியாவ் சொன்னார்.
இலவசப் பயணத்தால் உச்ச நேரங்களில் பயணம் செய்யக்கூடிய ஒன்பது விழுக்காடு பயணிகள் காலையில் நெரிசல் இல்லாத நேரங்களில் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
“இதனால் இருதரப்பிலும் நன்மை ஏற்பட்டுள்ளது. கூட்டம் குறைவாக உள்ள நேரங்களில் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய முடிந்தது. அதே சமயத்தில் அவ்வாறு செய்ய முடியாதவர்கள், நெரிசல் குறைந்த பயணத்தை அனுபவிக்கின்றனர்,” என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று செங்காங் வட்டாரத்திற்குப் பல அமைச்சர்கள் வருகையளித்தனர். அவர்களில் ஒருவரான திரு சியாவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஏதாவது இருக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலளித்த, உள்நாட்டு நெருக்கடி அமைச்சர்நிலைக் குழுவின் உறுப்பினருமான திரு சியாவ், மத்திய கிழக்கு பிரச்சினை வெடித்ததிலிருந்து பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் மாற்றமின்றி அப்படியே நீடிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஏப்ரலில் பேசிய தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரான கா. சண்முகம், மத்திய கிழக்கு நெருக்கடிக்கு சிங்கப்பூர் என்ன செய்யலாம் என்பதை ஒருங்கிணைக்கும் வகையில் அமைச்சர்நிலைக் குழு கூட்டப்பட்டதாகக் கூறியிருந்தார்.
“ஆம், நாங்கள் மத்திய கிழக்கு நிலவரத்தை உற்றுக் கவனித்து வருகிறோம். மேலும் மோசமடைந்தால் அதற்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வோம்,” என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.
கடந்த 2025 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு முன்னோடித் திட்டத்தின்படி சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள பயணிகள் வாரநாள்களில் நெரிசல் அல்லாத காலை 7.30 மணிக்கு முன்பு அல்லது காலை 9.00 மணியிலிருந்து 9.45 மணிக்குள் பயணம் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இது, வடகிழக்குத் தடத்தில் உள்ள பொங்கோல் கோஸ்ட்டுக்கும் கோவனுக்கும் இடையில் உள்ள ஆறு நிலையங்களில் ஏதாவது ஒன்றை, அல்லது செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் பொருந்தும்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே உச்சநேர நெரிசலை குறைப்பதும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியிருந்தது.
வடகிழக்குத் தடத்தில் உள்ள நிலையங்கள் வழியாகவும் செங்காங்-பொங்கோல் இலகு ரயிலிலும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் சிங்கப்பூர் ரயில்வே கட்டமைப்பில் சுறுசுறுப்பான ரயில் நிலையங்களாக அவை இருந்தன.
“எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு, இணையத்தள ஊழியர்கள், இதர அத்தியாவசிய சேவைகளுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்று,” என்று கூறிய திரு சியாவ், அத்தகையச் சேவைகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய சேவை வழங்கும் நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

