தன்மீதான ஊழல், மோசடி அல்லது மோசடிக்குச் சதிசெய்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் புல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்புக் குழும நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டேனியல் சான், அவற்றின் தொடர்பில் விசாரணை கோருகிறார்.
ஃபுல்லர்ட்டன் ஹெல்த் குழுமத்தின் இணை நிறுவனர்களான டேவிட் சின், மைக்கல் டான் இருவருடன் சேர்ந்து சான் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
‘ஏயான் ரிஸ்க் சொல்யூஷன்ஸ்’ என்ற காப்புறுதித் தரகு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கொலின் சியூவிற்கு லஞ்சமும் கையூட்டும் வழங்குவதற்காக அவர்கள் அவற்றைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
சான் மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றுள் நான்கைத் தொடர அரசுத் தரப்பு உத்தேசித்துள்ளது. எஞ்சிய ஒன்பது குற்றச்சாட்டுகளையும் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்படலாம் என்று திங்கட்கிழமை (மார்ச் 11) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையான சான், வேலை சார்ந்த காரணங்களுக்காக மார்ச் 12 முதல் மே 31 வரை பலமுறை பிலிப்பீன்ஸ் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிணைத்தொகையாக $100,000 நிர்ணயிக்கப்பட்டது. அவருக்கான மொத்த பிணைத்தொகையின் மதிப்பு $300,000.
சானும் சியூவும் வழக்கிற்கு முந்திய கலந்துரையாடலுக்காக ஏப்ரல் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
இதனிடையே, ஃபுல்லர்ட்டன் ஹெல்த் தலைவர் டேவிட் சின், முன்னாள் இயக்குநர் டான் இருவருக்குமான வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் ஏப்ரல் 12ஆம் தேதி இடம்பெறும்.
சின் 13 குற்றச்சாட்டுகளையும் டான் ஐந்து குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
ஃபுல்லர்ட்டன் ஹெல்த் குழுமத்தின் முன்னாள் உரிமையாளர்களான அம்மூவரும் கடந்த 2015 முதல் 2019 வரை சியூவிற்குப் பலமுறை மொத்தம் $668,000 கையூட்டு வழங்கச் சதிசெய்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.