ஓட்டம்வழி பிள்ளைகளின் நலனுக்கான நிதி திரட்டு

ஏறக்குறைய 36,000 வெள்ளி திரண்டது 

ஓட்டம்வழி பிள்ளைகளின் நலனுக்கான நிதி திரட்டு

படம்: லைஃப் கம்யூனிட்டி

22 Nov 2026 - 3:17 pm

2 mins read

உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவாக நடந்தேறியுள்ள ‘ரன் ஃபார் லைஃப்! 2026’ (Run for Life! 2026) நிகழ்ச்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்று ஆதரவை நல்கினர்.

‘எந்தக் குழந்தையும் தனித்து ஓடுவதில்லை’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், குடும்பத்தினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட மொத்தம் 468 பேர் பங்கெடுத்தனர்.

கரையோரப் பூந்தோட்டங்களின் ‘சில்வர் கார்டன்’ என்ற தோட்டத்தில் நடைபெற்ற இந்த நிதி திரட்டு ஓட்ட நிகழ்ச்சி, 2.4 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது. 

நிதி திரட்டு வழி பயனடையும் பிள்ளைகள்.
நிதி திரட்டு வழி பயனடையும் பிள்ளைகள். - படம்: லைஃப் கம்யூனிட்டி

எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊக்கமும் வழிகாட்டுதலும் தருவதற்குப் பெரியவர் இருக்க வேண்டும் என்ற அமைப்பின் நம்பிக்கையை இக்கருப்பொருள் பிரதிபலிக்கிறது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இரண்டு பிரிவு ஓட்டங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, ‘இவென்ட் வில்லேஜ்’ பிள்ளைகளுடன் கலந்துரையாடினார். 

ஓட்டத்திற்குப் பிறகு ஓட்டப்பந்தய வீரர்கள், பயனாளிகள், குடும்பத்தினர், தன்னார்வலர்கள், பங்காளிகள், ஆதரவாளர்கள் ஆகியோர் ஒன்றிணைக்கப்பட்டனர்.

இந்த முயற்சியின்கீழ் இதுவரை 35,850 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது. தனிமனிதர்களும் நிறுவனங்களும் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க அதிக அவகாசம் வழங்கும் வகையில், நிதி திரட்டு வரும் டிசம்பர் 31 வரை நீடிக்கும்.

கடந்த 30 ஆண்டுகளாக, அக்கறை, தலையீடு, நிலையான வழிகாட்டுதல் மூலம் குழந்தைகள் வலுவான அடித்தளங்களை உருவாக்க லைஃப் கம்யூனிட்டி உதவியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி லாம் மோய் குவாய் கூறினார். 

வழிகாட்டுதல் பெறும் பிள்ளைகளுடன்  அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
வழிகாட்டுதல் பெறும் பிள்ளைகளுடன் அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: லைஃப் கம்யூனிட்டி

ஐந்து கிலோமீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தோரில் வழிகாட்டி மார்லியானாவும் அவரின் 13 வயது மாணவி அலிசாவும் அடங்குவர்.

இவ்வாண்டு மே மாதத்தில் இணைந்த இவ்விருவரும், பேசுவதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளித்த அதிகாலை நடைப்பயிற்சிகள் மூலம் இதற்குத் தயாராயினர். 

“எல்லைக் கோட்டை ஒன்றாகக் கடப்பது என்பது நாம் எவ்வளவு வேகமாக ஓடமுடியும் என்பதைப் பற்றியதன்று. முன்னேற்றம் என்பது படிப்படியாகவே வரும் என்பதையும் அவளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த அவள் அருகில் ஒருவர் இருக்கிறார் என்பதையும் அவளுக்குக் காட்டுவதே இதன் நோக்கம்,” என்று மார்லியானா கூறினார். 

குறிப்புச் சொற்கள்