மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் ‘எஸ்ஜி60’ஐ முன்னிட்டு லாபநோக்கம் இல்லாமல் செயல்படும் ஏஎம்பி (AMP) சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து நிதி திரட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் ஜூலை 22ஆம் தேதி கோல்ஃப் விளையாட்டு நிகழ்ச்சியை பெரித்தா ஹரியானும் ஏஎம்பி அமைப்பும் நடத்துகின்றன.
சிங்கப்பூர் இவ்வாண்டு அதன் 60வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. அதனால் ஏற்பாட்டாளர்கள் தங்களது தொண்டு நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை சமூகத்துக்கு கொடுத்து உதவ உள்ளனர்.
பெரித்தா ஹரியான் முதல்முறையாக கோல்ஃப் விளையாட்டு மூலம் நிதி திரட்டுகிறது.
தொண்டு நிகழ்ச்சி மூலம் 300,000 வெள்ளி திரட்ட ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கிடைக்கும் நன்கொடையை இரண்டு தரப்பும் சமமாகப் பிரித்துகொள்வார்கள்.
பெரித்தா ஹரியான் தனக்கு கிடைக்கும் நன்கொடைகளை சிங்கப்பூர் குழந்தைகள் சமூக அமைப்புக்கும் உயர்நிலைக் கல்விக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக கொடுக்கவும் பயன்படுத்தும்.
அதேபோல் ஏஎம்பி சிங்கப்பூர் அமைப்பு அதன் நன்கொடை பங்கை அதன்கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கும்.

