சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரரான 77 வயது எஸ். ராஜகோபாலுக்கு ஆதரவு வழங்க செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) 80,000 வெள்ளிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.
சிங்கப்பூர்க் காற்பந்துச் சமூகம் ஒன்றிணைந்து சிராங்கூன் கார்டன்ஸ் கன்ட்ரி கிளப்பில் ‘நல்ல நினைவுகளுக்கு நன்றி’ எனும் சிறிய இசை நிகழ்ச்சியை நடத்தியது. அதில் சிங்கப்பூர் ‘ராக்’ இசைக்குழுவான ‘ஜெர்ரி அண்ட் தி நியூஃபேசஸ்’ பங்கேற்று இசை வழங்கியது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தங்களுடன் விளையாடிய திரு ராஜகோபாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சிங்கப்பூர்க் காற்பந்து ஆட்டக்காரர்களான குவா கிம் சோங், லிம் டெங் சாய், சியாக் போ லியோங் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கடந்த 2025 ஜூலை மாதம் முதுமைக்கால மறதிநோய் இருப்பது கண்டறியப்பட்ட திரு ராஜகோபால், தற்போது பிலிப்பீன்சில் வசித்து வருகிறார். தற்போது அவர் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளார்.
மிகுந்த உடலுறுதியுடனும் விரைவாகவும் திடலில் ஓடி விளையாடியதால் ‘தி கேமல்’ என அழைக்கப்பட்ட திரு ராஜகோபால், 1977ஆம் ஆண்டு மலேசியக் கிண்ணம் வென்ற சிங்கப்பூர் அணியில் இடம்பெற்றிருந்தார். ‘பனானா கிக்’ மூலம் பந்தை உதைப்பதில் வல்லவரான அவர், அதன்மூலம் தற்காப்பு வீரர்களையும் கோல்காப்பாளர்களையும் திணறடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
