தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரியாணியின்வழி அதிபர் சவாலுக்கு நிதி திரட்டு

3 mins read
9004b79f-e98f-4b90-85f0-732f04e17dcd
அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான பிரியாணியைத் தயார்செய்ய உதவினர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் சவால் நன்கொடை பிரியாணி நிகழ்ச்சி இவ்வாண்டு மீண்டும் நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28), காலித் பள்ளிவாசல் வளாகத்தை பிரியாணியின் நறுமணம் நிரப்பியது.

கொவிட்-19 தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளால் 2020ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இவ்வாண்டு ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் (RLAF), காலித் பள்ளிவாசல், ஒன் மாஸ்க் செக்டர், சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மீண்டும் நடைபெற்றது.

சிங்கப்பூரின் எல்லாப் பள்ளிவாசல்களும் கூட்டாகச் சேர்ந்து அதிபர் சவால் நிதிக்கு நன்கொடை வழங்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காலித் பள்ளிவாசலின் மறைந்த ஹாஜி அலாவுதீன் முகமது அறிமுகப்படுத்திய பிரியாணி பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்த நன்கொடை பிரியாணி நிகழ்ச்சி, 2000ஆம் ஆண்டு முதல், பகிர்வையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் கம்பத்து உணர்வைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இவ்வாண்டு, மொத்தம் $150,000 நிதி திரட்டப்பட்டு, அதிபர் சவாலுக்கும் மாவார் சமூகச் சேவையின்கீழ் இயங்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி, மாற்றுத்திறனாளிகள், சிறைக்கைதிகளின் குடும்பத்தினர், அபாயத்தில் உள்ள இளையர்கள் ஆகிய தரப்பினருக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் ஜேன் இத்தோகியும் மாவார் சமூக சேவை நிலையத்தில் நடைபெற்ற பிரியாணி தயாரிப்பில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

அவர்களுடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், முயிஸ் தலைவர்கள், நன்கொடையாளர்கள், பயனாளர்கள் முதலியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிபர், திருவாட்டி தர்மன், இணைப் பேராசிரியர் ஃபைஷால் மூவரும் சமைக்கப்பட்டிருந்த 12 பெரிய பிரியாணிப் பாத்திரங்களில் ஒன்றில் இறுதியாக மசாலாப் பொருள்களைச் சேர்த்தனர்.

அதிபர், அவரது துணைவியார், இணைப் பேராசிரியர் ஃபைஷால் மூவரும் பிரியாணியில் இறுதியாக மசாலாப் பொருள்களைச் சேர்த்தனர்.
அதிபர், அவரது துணைவியார், இணைப் பேராசிரியர் ஃபைஷால் மூவரும் பிரியாணியில் இறுதியாக மசாலாப் பொருள்களைச் சேர்த்தனர். - படம்: சாவ்பாவ்

மொத்தமாகத் தயாரிக்கப்பட்ட பிரியாணிப் பொட்டலங்களில் ஏறத்தாழ 2,800 பொட்டலங்கள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டன. பிரியாணி விற்பனைச் சீட்டுகளைச் சமூகத்தினர் முழுமையாக வாங்கிக்கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இணைப் பேராசிரியர் ஃபைஷால், இத்தகைய தொண்டு நிகழ்ச்சிகள் நிதி திரட்டுக்கும் அப்பால், சமூகத்தை ஒன்றிணைக்கும் சிறந்த வாய்ப்புகள் என்றார்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.
நிகழ்ச்சியில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: சாவ்பாவ்

“இது முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமன்றி, சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைக்கிறது என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

“இங்குத் திரட்டப்படும் நிதி, இனம், சமயம், மொழி சார்ந்த பேதங்களுக்கு அப்பால், நமது சக மனிதர்களுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது சிங்கப்பூரில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும், நம்மிடையே நிலவும் இடைவெளிகளைக் குறைப்பதற்கும், ஒருவரையொருவர் மதித்துப் புரிந்துகொள்ளும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு வலுவான சான்றாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, அதிபரும் திருமதி தர்மனும் மற்ற முக்கிய விருந்தினர்கள், பயனாளர்கள், நன்கொடையாளர்களுடன் இணைந்து காலித் பள்ளிவாசலில் மதிய உணவை அருந்தினர். விருந்தினர்களுக்கான உணவை அதிபரும் திருவாட்டி ஜேன் இத்தோகியும் பரிமாறினர்.

விருந்தினர்களுக்கு அதிபரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி உணவு பரிமாறினார்.
விருந்தினர்களுக்கு அதிபரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி உணவு பரிமாறினார். - படம்: சாவ்பாவ்

“இந்த உணவை நாம் பகிர்ந்து உட்கொள்ளும் இத்தருணத்தில், உண்மையான ஊட்டச்சத்தை நமக்கு முன்னால் இருக்கும் உணவிலிருந்து மட்டுமல்லாமல், நாம் மற்றவர்களுக்கு வழங்கும் அன்பு, கருணை, பரிவு முதலியவற்றிலிருந்தும் பெறுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்,” என்று காலித் பள்ளிவாசல் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் அரிஃபின் முகமது கவாஜா கூறினார்.

ஆகஸ்ட் மாதத்திலேயே இதற்கான தயாரிப்புகள் தொடங்கியதாகவும் பல்வேறு அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்பே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சி நிறைவுபெற்றதையடுத்து, சிங்கப்பூரின் பல பகுதிகளில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 1,000 பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்