அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ‘இஆர்பி 2’ கட்டணமுறைக்கு மாறும்போது பெரும்பாலான நுழைவாயில்கள் அகற்றப்படும்.
அதன்பின் மின்னியல் சாலைக் கட்டணம் விதிக்கப்படும் இடங்களை வாகன ஓட்டிகள் சாலைக் குறியீடுகள் மூலமும் வாகனத்தில் பொருத்தப்பட்ட கருவியின் எச்சரிக்கைகள் மூலமும் அறிந்துகொள்ளலாம்.
தற்போதுள்ள மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயில்கள் 2027 ஜூன் மாதத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். அதன்பிறகு செயற்கைக்கோள் அடிப்படையிலான சாலைக் கட்டணம் விதிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமையன்று (நவம்பர் 18) அறிக்கையில் தெரிவித்தது.
மின்னியல் சாலைக் கட்டணம் விதிக்கப்படும் சாலைப் பகுதிக்குள் நுழையும்போது சாலைக் குறியீடுகளும் சாலைச் சமிக்கைகளும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்.
சாலைத் தடங்களில் ‘இஆர்பி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட நீல நிற நீள்வட்டக் குறியீடுகள் வரையப்பட்டிருக்கும். முதன்மைச் சாலைகளிலும் இணைப்புச் சாலைகளிலும் கட்டணப் பகுதிக்குச் செல்லும் தடத்தில் அத்தகைய இரு குறியீடுகளும் விரைவுச்சாலைகளில் மூன்று குறியீடுகளும் இடம்பெறும்.
கட்டணம் விதிக்கப்படும் இடத்திற்குள் நுழைவதை ‘இஆர்பி கட்டணப் பகுதி’ எனும் சமிக்ஞை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும்.
புதிய முறைக்கு வாகன ஓட்டிகள் பழக்கப்படுவதற்காக, பயன்பாட்டில் உள்ள நுழைவாயில்களில் 2027 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பே இம்மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
மாறிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப விரைவாகச் செயல்படவும் போக்குவரத்துத் திட்டமிடலுக்குச் சிறப்பாக ஆதரவளிக்கவும் இத்தொழில்நுட்பம் ஆணையத்திற்கு உதவும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
தற்போதுள்ள 95 நுழைவாயில்களில் 62 செயல்பாட்டில் இல்லை. எஞ்சிய 33 நுழைவாயில்கள் 2026 டிசம்பர் 31ஆம் தேதிவரை கட்டணம் வசூலிக்கப் பயன்படும்.
இதுவரை தீவு முழுவதும் 12 நுழைவாயில்கள் அகற்றப்பட்டுள்ளன அல்லது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
