நீடித்த நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் அதேவேளையில், அதன் தொடர்பில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனைத்துலக அளவில் சுற்றுலா, பயணச் சேவைகளை வழங்கி வரும் ‘டிரிப் டாட் காம்’ (Trip.com) நிறுவனம் அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூர்ப் பயணிகளில் 64.7 விழுக்காட்டினர் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
பசுமைப் போக்குவரத்து வழிகள், நிலைத்தன்மையை உறுதிசெய்யும் தங்குமிடங்கள் போன்ற அம்சங்களுடன் கூடிய சுற்றுலாவை அவர்கள் தேர்ந்தெடுத்ததாக ஆய்வு கூறியது.
மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பைகளையும் போத்தல்களையும் தவிர்த்தல், உணவுக் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றையும் சிங்கப்பூர்ப் பயணிகள் உறுதிசெய்துள்ளனர்.
எனினும், ஆய்வில் பங்கேற்றவர்களில் பலரும் எது நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய பயணம் என்பதில் குழப்பம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சிலர் நிலைத்தன்மையுடன் கூடிய பொருள்கள், தயாரிப்புகள், முயற்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கின்றனர்.
இது பயண முகவர்கள், நுகர்வோருக்கு வழங்கும் தகவல் பரிமாற்றங்களில் மேம்பாடு அவசியம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
அத்துடன், நீடித்த நிலைத்தன்மையைத் தனிநபராக உறுதிசெய்வது சாத்தியம் அல்ல எனும் மனப்பான்மையும் பயணத்தில் அதனை உறுதி செய்வது கடினம் என்ற கருத்தும் இதற்குக் காரணம் என ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்வது பயணச் செலவை அதிகரிக்கக்கூடும் என்பதாலும் அவ்வாய்ப்புகளைப் பலர் பரிசீலிப்பதில்லை என்று ஆய்வறிக்கை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மைக்காக கூடுதல் செலவு
அனைத்துலக அளவில் 42.5 விழுக்காட்டினரும் சிங்கப்பூரில் ஏறத்தாழ 41 விழுக்காட்டினரும் தங்கள் பயணத்தில் நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்ய சற்றே அதிகம் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ஆய்வில் பங்கேற்றோர் எவ்வளவு கூடுதலாகச் செலவிடத் தயாராக உள்ளனர் என்பதற்கும் தெளிவான வரம்புகள் உள்ளன என்றது இந்த ஆய்வு.
பதிலளித்தோர் ஐவரில் ஒருவர் 5 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் செலுத்தத் தயார் என்றனர். 4.7 விழுக்காட்டினர் 20 விழுக்காடு அதிகமாக செலுத்தவும் 1.7 விழுக்காட்டினர் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் செலவிடவும் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பயணம் மேற்கொள்வோர் குறிப்பாக இதனைத் தேர்ந்தெடுக்காத போதிலும் இணையவழி முன்பதிவில் இவ்வகை விருப்பங்களைத் தேர்வு செய்கின்றனர். சிங்கப்பூரில் 61.7 விழுக்காட்டினர் வழக்கமாக இதனைத் தேர்ந்தெடுப்பதாக ஆய்வறிக்கை சுட்டியது.
குறிப்பாக ‘ஜென் ஸி’ (Gen Z) எனப்படும் இளையர்களும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய பயணத் தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இளையர்கள் நால்வரில் மூவர் இணையவழியில் பயணச்சீட்டு வாங்கும்போது நிலைத்தன்மைமிக்க தெரிவுகளை விரும்புகின்றனர். பாதிக்கும் மேற்பட்டோர் (53.6%) சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி இதைத் தேர்ந்தெடுப்பதாகச் சொன்னாலும் மீதமுள்ளோர்க்கு (48.3%) நிலைத்தன்மையுடன் கூடிய பயணத் தெரிவுகள் என்றால் என்னவென்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடந்து இயற்கையின் அதிசயங்களை அனுபவிக்கும் வேளையில், எதிர்காலச் சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாப்பதும் பொதுமக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதற்கான பணியைச் சரிவர மேற்கொள்ள இவ்வகை ஆய்வுகளும் அவற்றையொட்டிய செயல்பாடுகளும் உதவும் என்று ‘டிரிப் டாட் காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

