உயர்மாடியிலிருந்து குப்பை வீசுவோர்: கண்காணிப்பு கேமராவால் கண்டறிவது அதிகரிப்பு

உயர்மாடியிலிருந்து குப்பை வீசுவோர்: கண்காணிப்பு கேமராவால் கண்டறிவது அதிகரிப்பு

2 mins read
நகர மன்றங்களுடன் இணைந்து குப்பை வீசுவோரைக் கண்டுபிடிக்கிறது தேசிய சுற்றுப்புற வாரியம்
72cd159f-1dd0-4fca-9ffa-c16ae04b0f7a
அங் மோ கியோ அவென்யூ 6ல் இரண்டு வார காலத்துக்குள் பல முறை உயர்மாடியில் இருந்து குப்பைகளை வீசியவர் கண்காணிப்பு கேமரா வழி பிடிபட்டார். அவருக்கு $2,800 அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

சிங்கப்பூர் அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல்தளங்களில் இருந்து குப்பை வீசுபவர்களைக் கண்டறிய தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்கொண்ட புதிய முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் 19 நகர மன்றங்களுடன் இணைந்து கேமராக்களை வாரியம் பொருத்தியது. அதன் மூலம், குப்பை வீசுபவர்களை 30 விழுக்காடு கண்டறிய முடிந்துள்ளது. இது முந்தைய 21 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.

ஆறு மாத சோதனைத் திட்டத்தின்கீழ், உயர்மாடியிலிருந்து குப்பை வீசப்படுவதை விரைவாகவும் சரியாகவும் கண்டறிய ஒவ்வொரு நகர மன்றத்திற்கும் இரு கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.

2025ல் 2,200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதை தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்பார்வையிட்டது.
2025ல் 2,200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதை தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்பார்வையிட்டது. - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

இத்திட்டத்தின் கீழ் 2025 டிசம்பரில் 39 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்கள் மூலம் குப்பை வீசியவர்கள் எந்தெந்தப் பகுதிகளில் பிடிபட்டார்கள் என்ற விவரங்களை வாரியம் தெரிவிக்கவில்லை.

2025ல் உயர்மாடிகளிலிருந்து குப்பை வீசிய 350 சம்பவங்கள் தொடர்பில் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், இத்தகைய குற்றச்செயல் குறித்த புகார்கள் 2023ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 28,600 ஆகவே உள்ளதாக வாரியம் குறிப்பிட்டது.

இத்தகைய செயல்களைத் தடுக்க, கேமரா கண்காணிப்புக் காலத்தை 14 நாள்களிலிருந்து 28 நாள்களாக வாரியம் நீட்டித்துள்ளது.

பொது இடங்களில் குப்பை வீசிய குற்றத்திற்காக நாடெங்கும் 13,200 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொது இடங்களில் குப்பை வீசிய குற்றத்திற்காக நாடெங்கும் 13,200 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

பொது இடங்களில் குப்பை போடுதல்

பொது இடங்களில் குப்பை வீசிய குற்றத்திற்காக நாடெங்கும் 13,200 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விதிமீறுபவர்களுக்கு முதல் முறை $2,000 வரையிலும், அடுத்தடுத்த முறைகளுக்கு $10,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம். கடந்த ஆண்டில் 700க்கும் மேற்பட்டோருக்குப் பொது இடங்களைச் சுத்தம் செய்யும் சீர்திருத்தப் பணி ஆணை வழங்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, குப்பை அதிகம் போடப்படும் பகுதிகளில் ஆறு மாத காலத்தில் 40 விழுக்காடு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு சுழற்சியிலும் பதிவு செய்யப்படும் எலிப் பொந்துகளின் சராசரி எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு சுழற்சியிலும் பதிவு செய்யப்படும் எலிப் பொந்துகளின் சராசரி எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

எலிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

எலிப் பிரச்சினை தொடர்பாக 2025ல் கட்டட உரிமையாளர்கள் மீது 1,300 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது 2024ஆம் ஆண்டைவிட 1,000 அதிகம் என்று வாரியம் சுட்டியது. இதில் 620 குற்றச்சாட்டுகள் கழிவுகளை முறையாக அகற்றாதது தொடர்பானது.

அதேநேரத்தில், எலித் தொல்லை கட்டுப்பாட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்தது.

குறிப்பாக லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு, நவீன வெப்ப உணர் கேமராக்களின் உதவியால் எலிகளின் நடமாட்டம் 70 விழுக்காடுவரை குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்