பிரபல ரொட்டித் தயாரிப்பு நிறுவனமான கார்டினியா ஃபுட்ஸ் 141 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக புதன்கிழமை (மே 20) அறிவித்துள்ளது
பாண்டன் லூப்பில் உள்ள அதன் உற்பத்தி ஆலை ஜூன் 30ஆம் தேதி மூடப்படுகிறது. அன்றைய தினம் முதல் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் ஜோகூர் பாருவுக்கு மாற்றப்படும்.
சவாலான உலகளாவிய சூழலில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், போட்டித்தன்மையைத் தக்கவைக்கவும் இடமாற்றம் இடம்பெறுவதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது.
புதன்கிழமை (மே 20) நடைபெற்ற கூட்டத்தில் ஊழியர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கால அவகாசமும் உரிய ஆதரவும் வழங்கப்படும் என்றும், தகுதியான ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பிற பிரிவுகளில் மாற்றுப் பணிகள் பரிசீலிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
மறுசீரமைப்புக்குப் பின்னரும் கார்டனியா நிறுவனத்தின் முக்கியத் தலைமையகம் சிங்கப்பூரிலேயே தொடர்ந்து செயல்படும். இங்கு 250 ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசில் அங்கம் வகிக்கும் ‘உணவு, பானத் துறை சார்ந்த ஊழியர்கள் சங்கம்’ நியாயமான பணிநீக்க விதிமுறைகளை உறுதிசெய்ய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு, திறன் பயிற்சி, புதிய வேலைகளைக் கண்டறிய சங்கம் உதவி வருகிறது. ஊழியர்கள் தொடர்ந்து நிதியுதவியையும் தொழில் வழிகாட்டலையும் பெற வசதியாக, அவர்களுக்கு ஓராண்டிற்கான தொழிற்சங்க உறுப்பினர் கட்டணத்தை கார்டனியா நிறுவனம் ஏற்கும்.
பாதிக்கப்பட்ட ஊழியர்க்குப் பொருத்தமான வேலைகளைக் கண்டறிவது, தொழில் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு ஆதரவு வழங்குவதே தங்களின் தற்போதைய முன்னுரிமை என்று பொறுப்பான ஆட்குறைப்பு, வேலை நியமன ஒருங்கிணைப்புப் பணிக்குழு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி, என்டியுசி, வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் (e2i) ஆகியவற்றை உள்ளடக்கிய அந்தப் பணிக்குழு, கார்டினியா நிறுவனம் ஆட்குறைப்பு குறித்து முன்னதாகவே, உணவு, பானத் துறை சார்ந்த ஊழியர்கள் சங்கத்துக்குத் தெரிவித்ததை உறுதிப்படுத்தியது.
வேலை தேடும் தகுதியுள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் புதிய வேலையைப் பெறும் வரை வேலை தேடுவோவர் ஆதரவுத் திட்டத்தின் கீழ் தற்காலிக நிதியுதவியைப் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் அதிகபட்சமாக $6,000 வரை நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

