தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்க கவ்டெக் ஆட்குறைப்பு அவசியம்: ஜாஸ்மின் லாவ்

தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்க கவ்டெக் ஆட்குறைப்பு அவசியம்: ஜாஸ்மின் லாவ்

2 mins read
c7fb66ed-78f9-4d1d-b7e0-4a6ea9453e97
ஜூலை மாதம் ஆட்குறைப்பு செய்த கவ்டெக் அமைப்பின் முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரர்களுக்குத் தரமான மின்னிலக்கச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காகக் கவ்டெக் அமைப்பில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ்.

“அசுர வேகத்தில் மாறிவரும் தொழில்நுட்பத்திற்குக் கவ்டெக் அமைப்பு ஈடுகொடுக்கவேண்டும். அதில் நாம் பின்தங்கிவிட்டால் குடிமக்களுக்கான மின்னிலக்கப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் தரம் பாதிக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு ஜூலை மாதம் கவ்டெக் அமைப்பு அதன் ஊழியர்கள் சிலரை ஆட்குறைப்புச் செய்தது.

அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்ட ஊழியர்களைப் பணியில் தக்கவைக்க மாற்றுவழிகள் ஆராயப்பட்டதா, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எந்த வயதைச் சேர்ந்தவர்கள் போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்குப் பதிலளித்த கவ்டெக் அமைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான லாவ், ஆட்குறைப்புச் செய்யப்பட்ட 93 ஊழியர்களில் பெரும்பாலோர் 40லிருந்து 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றார்.

ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஊழியர்கள் சராசரியாக 5.4 ஆண்டுகள் அங்குப் பணிபுரிந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

வேலையிட உருமாற்றத்துக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாகக் கவ்டெக் அமைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 7 முதல் 9 விழுக்காடு வரையிலான ஊழியர்கள் அதாவது ஏறக்குறைய 300 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று மதிப்பிடப்படுகிறது. கவ்டெக் அமைப்பில் 3,900 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

நவம்பர் மாதத்தில் அடுத்தகட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்குப் பிற வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிலர் புதிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் வேறு சிலர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளனர் என்றும் திரு லாவ் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைப் பிரிவு, திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கவ்டெக் அமைப்பு, 300க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைப் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக அடையாளம் கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமைப்புஅரசாங்கம்ஆட்குறைப்புதொழில்நுட்பம்வளர்ச்சிமறுசீரமைப்பு